திராவிடர் கழகத்தின் நீட்சிதான் திமுக: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு


திராவிடர் கழகத்தின் நீட்சிதான் திமுக: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
x

நான் எப்போதும் எனது செயல்களால் மட்டுமே பதிலடி கொடுக்கிறேன் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

செங்கல்பட்டு

செங்கல்பட்டு மறைமலைநகரில் திராவிடர் கழகம் சார்பில் நடைபெற்ற சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநாட்டில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். இந்த விழாவில் உரையாற்றிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது:-

திராவிடர் கழகத்தினர் அனைவருக்கும் எனது சல்யூட். கலைஞர், பேராசிரியருக்கு பிறகு என்னை வழிநடத்துபவர் கி.வீரமணி. திராவிடர் கழகத்திற்கு எதிராக தொடங்கியது அல்ல திமுக; திராவிடர் கழகத்தின் நீட்சி தான் திமுக. 92 வயதிலும் இளைஞர் போல வீரமணி ஊர் ஊராக பரப்புரை செய்கிறார். அவதூறுகளுக்கு பதில் தருகிறார். உங்கள் பணி சுமையை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

பெரியாரின் சிந்தனைகளை அவர் வாழும் காலத்திலேயே நிறைவேற்றியது திமுக. திருச்சியில் உருவாகும் பெரியார் உலகத்துக்கு எனது ஒரு மாத ஊதியத்தை கொடுக்க முடிவெடுத்தேன். 31 எம்.பிக்களின் ஊதியத்தையும் சேர்த்து திமுக சார்பில் ரூ.1.50 கோடி கொடுக்கிறோம்.

என்னைப்பற்றி பல வதந்திகளை பரப்பி வருகின்றனர். அதைப்பற்றி கவலையின்றி நான் எப்போதும் எனது செயல்களால் மட்டுமே பதிலடி கொடுக்கிறேன். நம் இனத்திலிருந்து ஐஏஎஸ் ஐபிஎஸ் அதிகாரிகள் உருவாவது சிலருக்கு பிடிக்கவில்லை. தமிழும் பிடிக்காது, தமிழர்களும் பிடிக்காது; நாம் தலைநிமிர்வதும் சிலருக்கு பிடிக்காது.

இந்தியாவை ஒரு நூற்றாண்டுக்கு பின் இழுக்கிறார்கள். அதை தடுத்து நிறுத்துவதுதான் திராவிட மாடல். தமிழ்நாட்டை நாசப்படுத்த நினைக்கும் கூட்டத்தை வேரோடு வீழ்த்த வேண்டும். அடுத்த தேர்தல் தமிழர்களை தற்காக்கும் தேர்தல். தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டோம் என்று உறுதியேற்போம். இவ்வாறு அவர் கூறினார்.

1 More update

Next Story