அரசை நடத்துவதில் திமுகதான் சீனியர்: உதயநிதி ஸ்டாலின் பேச்சு

திமுக ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சி என்று உதயநிதி ஸ்டாலின் கூறினார்.
அரசை நடத்துவதில் திமுகதான் சீனியர்: உதயநிதி ஸ்டாலின் பேச்சு
Published on

சென்னை,

பரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில் சட்டசபை கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. முதல் நிகழ்வாக, சட்டசபையில் சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர் தேர்வு நடைபெற்றது. இதில் யாரும் போட்டியிடாததால் சபாநாயகராக ஜே.சி.டி.பிரபாகரனும், துணை சபநாயகராக ரவிசங்கரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.

அதன் பின்னர் சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகரை மரபுபடி அவை முன்னவர் செங்கோட்டையன், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினும் இரு கைகளை பிடித்து சபாநாயகர் இருக்கையில் அமர வைத்தனர். பின்னர் முதல்-அமைச்சர், எதிர்க்கட்சித் தலைவர் உள்பட சட்டமன்ற கட்சித் தலைவர்கள், ஜே.சி.டி. பிரபாகரை வாழ்த்திப் பேசினர்.

அப்போது எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:-

17-வது சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராக எனது முதல் உரை இது. இவ்வேளையில் எங்கள் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்களித்த 1.54 கோடி தமிழ்நாடு மக்களுக்கு நன்றி. சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகராக தேர்வு செய்யப்பட்டுள்ள இருவருக்கும் வாழ்த்துகள்.

தமிழ்நாடு சட்டசபையில் எதிரிக்கட்சியாக இல்லாமல், ஒரு ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாக நிச்சயம் திராவிட முன்னேற்றக் கழகம் செயல்படும். நாங்கள் என்றைக்கும் ஒரு ஆக்க சக்தி தான். முதலமைச்சர் விஜய், திமுக தலைவர் இல்லதிற்கும் அரசியல் கட்சி தலைவர் இல்லதிற்கும் சென்று வாழ்த்துக்கள் பெற்றுள்ளார். அந்த அரசியக் நாகரீகம் சட்டப்பேரவையில் தொடர வேண்டும் என்பது எங்களுடைய எண்ணம் எதிர்பார்ப்பு.

முதல்-அமைச்சர் விஜய்யும் நானும் ஒரே காலேஜில் படித்தவர்கள்.. ஆனால் அரசை நடத்துவதில் திமுகதான் சீனியர். அந்த அடிப்படையில் எங்களுடைய அறிவையும், அனுபவத்தையும் பகிர்ந்து கொள்ள நாங்கள் (திமுக) தயாராக இருக்கிறோம். அதை ஏற்றுக்கொள்ள நீங்களும் (தவெக அரசு) தயாராக இருங்கள். ஏனென்றால் நமக்கு எப்போதுமே தமிழ்நாட்டு மக்களின் நலனே முக்கியம்.

சபாநாயகர் அவர்கள் எங்கள் இருதரப்பையும் கைகளை பிடித்து அரவணைத்து செல்ல வேண்டும். அவைத் தலைவரை கோபப்படுத்தும் வகையில் நாங்கள் செயல்பட மாட்டோம். சட்டமன்றத்தில் ஆளுங்கட்சி காதுகளாகவும், எதிர்க்கட்சிகள் குரலாகவும் இருக்க வேண்டும். அதில்தான் இந்த அவையின் பெருமை உள்ளது. அளுங்கட்சி, எதிர்க்கட்சி என்று இல்லாமல் மாநில வளர்ச்சிக்காக நாம் அனைவரும் ஒரே வரிசையில் இருக்க வேண்டும்.

ஆளுங்கட்சிக்கு இணையாக எதிர்க்கட்சி வரிசை அமைந்துள்ளது. அரசு நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கே முதலிடம். பதவியேற்பு விழாவில் நடந்த தவறு இனி நடக்கக்கூடாது. “வெல்க தமிழ்! வாழ்க தமிழ்நாடு! மக்களை பிரிக்கும் சனாதனம் நிச்சயம் ஒழிக்கப்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com