

உடன்குடி,
திருச்செந்தூர் பகுதியில் தி.மு.க.வினர் வாக்காளர்களுக்கு பணம் வினியோகம் செய்ததாக வாட்ஸ்-அப்பில் வெளியான வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் தி.மு.க. தெற்கு மாவட்ட பொறுப்பாளர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு சொந்தமான பண்ணை தோட்டம், உடன்குடி அருகே தண்டுபத்து கிராமத்தில் உள்ளது. அந்த தோட்டத்தில்தான் தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டங்கள் நடத்தப்படுவது வழக்கம்.
அந்த தோட்டத்தில் கோடிக்கணக்கில் பணம் புதைத்து பதுக்கி வைத்து இருப்பதாக, திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதி தேர்தல் பறக்கும் படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து தாசில்தார் அழகர்சாமி தலைமையிலான பறக்கும் படையினர் நேற்று காலையில் தண்டுபத்தில் உள்ள பண்ணை தோட்டத்திற்கு சென்று திடீர் சோதனை நடத்தினர். அப்போது அந்த தோட்டத்தில் தொழிலாளர்கள் வேலை செய்து கொண்டிருந்தனர்.
தேர்தல் பறக்கும் படையினர், பண்ணை தோட்டத்தில் ஆங்காங்கே குழிகள் தோண்டி பார்த்தனர். ஆனால், அங்கு எந்த பணமும் சிக்கவில்லை. இதையடுத்து தேர்தல் பறக்கும் படையினர் திரும்பி சென்றனர்.
தி.மு.க. எம்.எல்.ஏ. தோட்டத்தில் பணம் பதுக்கப்பட்டு உள்ளதா? என பறக்கும் படையினர் குழி தோண்டி சோதனை நடத்தியது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.