திமுக எம்.எல்.ஏ. வசந்தம் கார்த்திகேயன் தலைமறைவு

திமுக வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ. மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
திமுக எம்.எல்.ஏ. வசந்தம் கார்த்திகேயன் தலைமறைவு
Published on: 

சென்னை,

பெண் உயரதிகாரிக்கு மிரட்டல் விடுத்த வழக்கில் ரிஷிவந்தியம் திமுக எம்.எல்.ஏ. வசந்தம் கார்த்திகேயன் தலைமறைவாகியுள்ளார்.

கலெக்டரிடம் புகார்

தமிழ்நாடு மாநில ஊரக, நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் கள்ளக்குறிச்சி மாவட்ட திட்ட இயக்குனராக பணியாற்றி வந்த லலிதா, கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டருக்கு கடந்த மாதம் 19-ந் தேதி புகார் மனு அனுப்பினார்.

அதில், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கடந்த பிப்ரவரி மாதம் முதல் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குனராக பணியாற்றினேன். கடந்த அக்டோபர் மாதம் 18-ந் தேதி வசந்தம் கார்த்திகேயன்(வயது 49) எம்.எல்.ஏ. என்னை செல் போனில் தொடர்பு கொண்டு காலை உணவு திட்டத்தில் திருக்கோவிலூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஒரு பெண்ணை ஏன் எடுத்தீர்கள் என்று கேட்டார்.

நான் யார் தெரியுமா?

அதற்கு நான், கிராம ஊராட்சி அளவில் காலை உணவு திட்டத்தில் பணியாற்றி வந்த சமையல் பணியில் உள்ளவரை பணி அமர்த்தவோ, எடுப்பதற்கோ எனக்கு அதிகாரமில்லை. அதற்கென்று தனியாக ஒரு குழு உள்ளது. எனக்கும் அதற்கும் சம்பந்தமில்லை என்றேன். உடனே வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ. நான் யார் தெரியுமா?, என்னை பற்றி தெரிந்து கொண்டு தான் வேலைக்கு இந்த மாவட்டத்திற்கு வந்தீர்களா?.

நீங்கள் சாதி பார்த்து வேலை செய்கிறீர்கள், சாதியை சொல்லி திட்டுகிறீர்கள், இதுகுறித்து அமைச்சரிடமும், உயர் அதிகாரிகளிடமும் பேசுகிறேன் என மிரட்டும் தொனியில் பேசினார். இதேபோல் விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த நிர்வாகி ஒருவரும் என்னை மிரட்டுகிறார்.

வழக்குப்பதிவு

இவர்கள் இருவரும் என்மீது அபாண்டமான குற்றச்சாட்டு களை வாட்ஸ்-அப் மூலம் பரப்பி வருகின்றனர். எனவே சமூக வலைத்தளத்தில் இவர்கள் பரப்பிவரும் தவறான தகவலை நீக்கம் செய்வதோடு. இவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மனுவில் கூறப்பட்டிருந்தது.

மேலும் இந்த புகார் முதல்-அமைச்சரின் தனிப்பிரிவிற்கும் அனுப்பப்பட்டது. இந்த மனுவை பெற்றுக்கொண்ட தனிப்பிரிவு அதிகாரிகள், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த தியாகதுருகம் போலீசாருக்கு உத்தரவிட்டனர். அதன்பேரில் வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ. மீது 4 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

தலைமறைவு

இந்த நிலையில், பெண் உயரதிகாரிக்கு மிரட்டல் விடுத்த வழக்கில் ரிஷிவந்தியம் திமுக எம்.எல்.ஏ. வசந்தம் கார்த்திகேயன் தலைமறைவாகியுள்ளார். அவரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதனையடுத்து தலைமறைவாக உள்ள அவரை கைது செய்ய டி.ஐ.ஜி., அருளரசு மேற்பார்வையில் விழுப்புரம் எஸ்.பி., மதிவாணன், கடலுார் எஸ்.பி., விவேகானந்தசுக்லா ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.

இதற்கிடையில் கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்க முன்ஜாமின் கேட்டு கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் வசந்தம் கார்த்திகேயன் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

X