

சென்னை,
தமிழக அரசின் நிதித்துறை அமைச்சர் பொறுப்பு வகிக்கும் ஓ.பன்னீர்செல்வம் இன்று காலை 10.30 மணிக்கு 2018-19-ம் ஆண்டுக்கான அரசின் நிதிநிலை அறிக்கையை (பட்ஜெட்) தாக்கல் செய்கிறார்.
அவர் ஏற்கனவே 7 பட்ஜெட்களை சட்டசபையில் தாக்கல் செய்துள்ளார். இது அவர் தாக்கல் செய்யும் 8-வது பட்ஜெட் ஆகும். காலை 10.30 மணிக்கு உரையை அவர் வாசிக்கத்தொடங்குவார். சுமார் 2 மணி நேரம் அவர் பட்ஜெட் உரையை படிப்பார்.
இந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் கோடைகால குடிநீர் பற்றாக்குறை, சட்டம்-ஒழுங்கு, அடிக்கடி நடக்கும் செயின் பறிப்பு, போலீசார் தற்கொலை போன்ற பெரும் பிரச்சினைகளை எதிர்க்கட்சி தி.மு.க. மற்றும் காங்கிரஸ் கட்சிகளால் எழுப்பப்படும் என்று தெரிகிறது.
இந்த நிலையில், தமிழக பட்ஜெட் கூட்டத்தொடருக்கு தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கருப்பு சட்டை அணிந்து வருகின்றனர்.
சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்ட பின்பும் காவேரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து தமிழக பட்ஜெட் கூட்டத்தொடரில் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கருப்பு சட்டை அணிந்து பங்கேற்கின்றனர்.