தூத்துக்குடி மாவட்டத்தில் திமுக எம்.பி. கனிமொழி இன்று முதல் 3 நாட்கள் சுற்றுப்பயணம்

தூத்துக்குடி மாவட்டத்தில் கனிமொழி எம்.பி. இன்று (சனிக்கிழமை) முதல் 3 நாட்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் திமுக எம்.பி. கனிமொழி இன்று முதல் 3 நாட்கள் சுற்றுப்பயணம்
Published on

தூத்துக்குடி,

தூத்துக்குடி தொகுதி எம்.பி. கனிமொழி, தூத்துக்குடி மாவட்டத்தில் இன்றும் (சனிக்கிழமை), நாளையும் (ஞாயிற்றுக்கிழமை) பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பேசுகிறார். அதன்படி இன்று மாலை 6 மணிக்கு தூத்துக்குடி பாஸ்கரன் திருமண மண்டபத்தில் தியாகி பொன்னுச்சாமி வில்லவராயரின் நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்டு, அவரது நினைவு தபால் உறையை பெற்றுக்கொண்டு பேசுகிறார்.

நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 9 மணிக்கு கோவில்பட்டி பாரதிநகரில் மகளிர் சுய முன்னேற்றத்துக்காக நாப்கின் உற்பத்தி செய்ய, தனது சொந்த செலவில் நாப்கின் எந்திரங்களை வழங்குகிறார். 9.30 மணிக்கு கோவில்பட்டி நகரத்தில் வேலுச்சாமி என்பவரின் முடிதிருத்தும் கடையில் உள்ள நூலகத்துக்கு புத்தகங்கள், 10 மணிக்கு கோவில்பட்டி சங்கரலிங்கபுரத்தில் ரூ.4 லட்சம் மதிப்பிலான கபடி மேட் வழங்குகிறார்.

11.30 மணிக்கு தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் கலைஞர் அரங்கில் 2021 சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. மகளிர் அணி, மகளிர் தொண்டரணியினர் பிரசாரம் மேற்கொள்வது குறித்து ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்று ஆலோசனைகளை வழங்குகிறார். மாலை 5.30 மணிக்கு புதூர் மேற்கு ஒன்றியம் மாசார்பட்டியில் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.15 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட பள்ளி கட்டிடத்தை திறந்து வைக்கிறார்.

6.30 மணிக்கு சிங்கிலிபட்டியில் கபடி விளையாட்டு வீரர்களுக்கு காலணி, ஜெர்சி, டி-சர்ட்டும், இரவு 7 மணிக்கு விளாத்திகுளம் கிழக்கு ஒன்றியம் தத்தனேரி கிராமத்தில் கபடி விளையாட்டு வீரர்களுக்கு தனது சொந்த செலவில் ரூ.4 லட்சம் மதிப்பிலான கபடி மேட்டும் வழங்குகிறார்.

இதேபோன்று கனிமொழி எம்.பி. தொகுதி மேம்பாட்டு நிதியில் தூத்துக்குடி தெற்கு மாவட்டத்துக்கு உட்பட்ட காயல்பட்டினத்தில் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு ரூ.75 லட்சம் செலவில் புதிய கட்டிடம் கட்டப்பட்டு உள்ளது. சேர்ந்தபூமங்கலம் பஞ்சாயத்து குமாரபண்ணையூரில் ரூ.25 லட்சம் செலவில் சமுதாய நலக்கூடம் கட்டப்பட்டு உள்ளது. இந்த புதிய கட்டிடங்களை கனிமொழி எம்.பி. வருகிற 22-ந் தேதி திறந்து வைக்கிறார்.

எனவே கழக நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள், திரளாக கலந்து கொள்ள வேண்டும். இந்த தகவலை தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க பொறுப்பாளர் கீதாஜீவன் எம்.எல்.ஏ., தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. ஆகியோர் தனித்தனியாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com