

சென்னை,
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-
நடிகர் விஜய் தலைமையிலான கட்சியை இழிவுபடுத்துவதாக நினைத்துக் கொண்டு, அந்தக் கட்சியில் உள்ள பெண்களை விலைமாதர்கள் என்ற பொருள்படும் அருவருக்கத்தக்க சொல்லைக் கொண்டு விமர்சனம் செய்திருக்கிறார் பொன்ராஜ் என்பவர். அரசியல் விமர்சகர் என்ற பெயரில் தொலைக்காட்சி விவாதங்களிலும், நேர்காணல்களிலும் பேசி வரும் பொன்ராஜ் தமிழ்நாட்டு பெண்களை இந்த அளவுக்கு தரம் தாழ்ந்து விமர்சித்த பிறகும் கூட, அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் காவல்துறை வேடிக்கைப் பார்ப்பது கண்டிக்கத்தக்கது.
நடிகர் விஜய் அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கைக் குறித்து அண்மையில் சர்ச்சைகள் எழுந்த போது, அவருக்கு ஆதரவாக அவரது கட்சியைச் சேர்ந்த சில பெண்கள் கருத்துகளைத் தெரிவித்திருந்தனர். நடிகர் விஜய்க்கான அவரது கட்சியினரின் கண்மூடித்தனமான ஆதரவைத் தான் அது காட்டுகிறதே தவிர, அதற்கு மேல் அதில் ஆராய்ச்சிகள் செய்வதற்கு எதுவுமில்லை; அது தேவையுமில்லை;
தமிழ்நாட்டின் இன்றைய சூழலுக்கு அது அவசியமுமில்லை. ஆனால், அப்துல்கலாமின் ஆலோசகர் என்றும், அரசியல் விமர்சகர் என்றும் பிழைப்பு நடத்தி வரும் பொன்ராஜ், விஜயின் கட்சியில் இருக்கும் பெண்கள் எல்லாம் விலைமாதர்கள் என்று கூறியுள்ளார். தமிழர் பண்பாடு மற்றும் தமிழ் நாகரிகத்தின் மீது நம்பிக்கைக் கொண்டவர்களால் இதை ஏற்கவே முடியாது.
தமிழ்ச் சமூகம் பெண்களை கடவுளாக வணங்கும் வழக்கம் கொண்டதாகும். பெண்களை இழிவுபடுத்தும் எவரையும் தமிழ்ச் சமூகம் மன்னித்ததே இல்லை. அறத்தின்படி பார்த்தாலும், சட்டத்தின்படி பார்த்தாலும் இது தண்டிக்கப்பட வேண்டிய குற்றம் ஆகும். ஆனால், இது குறித்து புகார் அளித்தும் சம்பந்தப்பட்ட நபர் மீது வழக்கும் பதிவு செய்யாமல், கைது உள்ளிட்ட நடவடிக்கைகளையும் மேற்கொள்ளாமல் தமிழக காவல்துறை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கிறது.
பெண்கள் குறித்து எதிர்க்கட்சியினர் எதையாவது பேசினால் உடனடியாக சம்மன் அனுப்பி விசாரிக்கத் துடிக்கும் தமிழ்நாடு மகளிர் ஆணையமும் இந்த விவகாரத்தில் எந்த நடவடிக்கையும் எடுக்காமல், கண்டனம் கூட தெரிவிக்காமல் குறட்டை விட்டு உறங்கிக் கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டுப் பெண்களை இழிவுபடுத்திய கயவரை காவல்துறை கைது செய்யாமலும், மகளிர் ஆணையம் விசாரணை நடத்தாமலும் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருப்பதற்கான காரணங்களைத் தேடி ஆராய்ச்சிகள் நடத்தத் தேவையில்லை.
தொலைக்காட்சி விவாதங்களிலும், நேர்காணல்களிலும் திமுகவின் கூலிப்படையாக அவர் முழங்கிக் கொண்டிருப்பது தான். பெண்களை இழிவுபடுத்தும் அனைத்துக் கயவர்களின் புகலிடமாக திமுக மாறி வருகிறது. பெண்களை இழிவுபடுத்துவது திமுகவின் டி.என்.ஏவில் கலந்தது. சட்டப்பேரவையில் திராவிட நாடு குறித்த விவாதத்தில் கலைஞர் குதர்க்கமாக பதில் அளித்த நாளில் இருந்தே இந்த வழக்கம் தொடங்கி விட்டது.
இப்போது திமுகவுக்கு ஆதரவாக செயல்படுவோருக்கும் அந்த நோய் தொற்றிக் கொண்டிருக்கிறது. தமிழகப் பெண்களை இழிவுபடுத்தும் வகையில் பேசிய பொன்ராஜ் உள்ளிட்ட கயவர்கள் அனைவர் மீதும் காவல்துறை வழக்குப் பதிவு செய்து கைது செய்ய வேண்டும். அவர்களுக்கு புகலிடம் அளித்து வருவதற்காக தமிழ்நாட்டு பெண்களிடம் திமுக தலைமை நிபந்தனையற்ற மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.