

சென்னை,
கடந்த 2024-ம் ஆண்டு மக்களவை தேர்தலின்போது நெல்லை விரைவு ரெயிலில் ரூ.4 கோடி பணம் கைப்பற்றப்பட்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில், திருநெல்வேலி தொகுதியில் போட்டியிட்ட நயினார் நாகேந்திரனுக்கு தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், அதனை அவர் திட்டவட்டமாக மறுத்தார்.
இந்த நிலையில், நெல்லை ரெயிலில் பணம் கைப்பற்றப்பட்ட விவகாரத்தில் பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் மீது வழக்கு பதிவு செய்ய அமலாக்கத்துறைக்கு உத்தரவிடக்கோரி சென்னை ஐகோர்ட்டில் தி.மு.க. சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தி.மு.க. எம்.பி. ஆர்.கிரிராஜன் தாக்கல் செய்துள்ள இந்த மனுவில், நயினார் நாகேந்திரன் மற்றும் பா.ஜ.க. முன்னாள் அமைப்பு பொதுச்செயலாளர் கேசவ விநாயகம் ஆகியோர் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்ய ஐகோர்ட்டு உத்தரவிட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும், இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட இருவரும் பா.ஜ.க.வைச் சேர்ந்தவர்கள் என்பதால், அவர்கள் மீது அமலாக்கத்துறை நடவடிக்கை எடுக்கத் தயங்குவதாகவும், இந்த விவகாரத்தில் ஆரம்பகட்ட விசாரணை நடத்தி வழக்குப்பதிவு செய்வது அவசியம் என்றும் கிரிராஜன் தனது மனுவில் வலியுறுத்தியுள்ளார்.