கவர்னருக்கு எதிரான திமுக போராட்ட அனுமதி விவகாரம்: அரசு பதிலளிக்க சென்னை ஐகோர்ட்டு உத்தரவு

கவர்னருக்கு எதிரான திமுக போராட்ட அனுமதி விவகாரம் தொடர்பாக தமிழக அரசு பதிலளிக்க சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
கவர்னருக்கு எதிரான திமுக போராட்ட அனுமதி விவகாரம்: அரசு பதிலளிக்க சென்னை ஐகோர்ட்டு உத்தரவு
Published on

சென்னை:

தமிழக கவர்னர் ஆர்.என்.ரவிக்கு எதிராக திமுகவினர் அண்மையில் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்திற்கு ஆளுங்கட்சியான திமுகவுக்கு விதிகளை மீறி அனுமதி அளித்ததாக காவல் ஆணையருக்கு எதிராக பாஜக வழக்கறிஞர் ஏ.மோகன்தாஸ் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

அவர் தாக்கல் செய்த மனுவில், அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தைக் கண்டித்து பாஜக உள்ளிட்ட எதிர்கட்சிகள் சார்பில் போராட்டம் நடத்த காவல்துறை ஆணையர் அனுமதி மறுத்துவிட்டார். மேலும், போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்களை கைது செய்யவும் உத்தரவிட்டார். ஆனால், கவர்னருக்கு எதிராக போராட்டம் நடத்த திமுகவினருக்கு மட்டும் விதிகளை மீறி அனுமதி அளித்துள்ளார்.

ஏற்கெனவே ஜனவரி 6 முதல் ஜனவரி 21 வரை 15 நாட்களுக்கு சென்னையில் எந்தவொரு ஆர்ப்பாட்டமோ, போராட்டமோ, ஊர்வலமோ நடத்தக் கூடாது என தடை விதித்திருந்த போலீசார், அனுமதியின்றி கவர்னருக்கு எதிராக போராட்டம் நடத்திய திமுகவுக்கு எதிராக மட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. சென்னை மாநகர காவல் ஆணையரான அருண் ஆளுங்கட்சிக்கு ஆதரவாகவும், எதிர்கட்சிக்கு எதிராகவும் ஒருதலைபட்சமாக செயல்பட்டு வருகிறார். எனவே, சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் மீது நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரியிருந்தார்.

இந்த நிலையில், இந்த மனு நீதிபதி பி.வேல்முருகன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் ஜி.எஸ்.மணி ஆஜராகி வாதிட்டார். இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த மனுவுக்கு தமிழக அரசின் உள்துறைச் செயலாளர், தமிழக டிஜிபி, காவல்துறை ஆணையர் உள்ளிட்டோர் 4 வாரங்களில் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கு விசாரணையை தள்ளிவைத்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com