தி.மு.க. தீர்மானம் கடும் கண்டனத்திற்குரியவை - தமிழ்நாடு காங்கிரஸ்

அரசியலில் நன்றி உணர்வும் கூட்டணி தர்மமும் மிகவும் முக்கியம் என்று தமிழ்நாடு காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
தி.மு.க. தீர்மானம் கடும் கண்டனத்திற்குரியவை - தமிழ்நாடு காங்கிரஸ்
Published on

சென்னை,

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

பல ஆண்டுகளாக மதச்சார்பற்ற கூட்டணியின் முக்கிய அங்கமாக இருந்த இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியை இன்று திமுக இளைஞரணி அமைப்பாளர்கள் கூட்டத்தில் அவமதிக்கும் வகையில் ‘முதுகில் குத்தியவர்கள்’ என தீர்மானம் நிறைவேற்றியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.

தேர்தல் காலங்களில் கூட்டணி கட்சிகளின் வாக்குகளையும், உழைப்பையும் பயன்படுத்திக் கொண்டு, பின்னர் அரசியல் ஆதாயத்திற்காக அவர்களையே குறிவைத்து தாக்குவது திமுகவின் இரட்டை வேட அரசியலை வெளிக்காட்டுகிறது. கூட்டணி கட்சிகளின் ஆதரவும், வாக்கு வலிமையும் இன்றி திமுக தனித்து நின்று தமிழகத்தில் என்றுமே வெற்றி பெற்றதில்லை என்பதையும் மக்கள் நன்கு அறிவார்கள்.

தங்களது அரசியல் தோல்விகளையும் மக்கள் எதிர்ப்பையும் மறைக்க காங்கிரஸ் கட்சியை குறிவைத்து தீர்மானங்கள் நிறைவேற்றுவது அரசியல் நாகரிகமற்ற செயலாகும். தமிழகத்தில் மதச்சார்பற்ற அரசியலை வலுப்படுத்த பல்வேறு கட்சிகள் இணைந்து போராடிய வரலாற்றை திமுக மறைக்க முடியாது.

அரசியலில் நன்றி உணர்வும் கூட்டணி தர்மமும் மிகவும் முக்கியம். ஆனால் திமுக தொடர்ந்து அவற்றை மீறி செயல்பட்டு வருகிறது. இந்திய தேசிய காங்கிரஸ் மட்டுமல்லாது, விடுதலை சிறுத்தைகள் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சிகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் பங்களிப்பையும் திமுக ஒருபோதும் மறக்கக் கூடாது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com