சட்டமன்ற தேர்தலில் கூடுதல் தொகுதிகளை திமுக ஒதுக்க வேண்டும்: சிபிஎம் மாநில செயலாளர் சண்முகம்

கடந்த 2021-ஆம் ஆண்டு தேர்தலில் திமுக ஒதுக்கிய குறைந்த தொகுதிகளை ஏற்றுக்கொண்டோம் என்று பெ.சண்முகம் கூறினார்.
சென்னை,
சிபிஎம் மாநில செயலாளர் பெ.சண்முகம் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர்கூறியதாவது:
திமுக கூட்டணியில் இருக்கும் கூட்டணி கட்சிகளை அரவணைத்துச் செல்வதன் அவசியத்தை வலியுறுத்துகிறேன். தற்போது நீடித்து வரும் ஒற்றுமையை, மேலும் கட்டிக் காப்பாற்றுவதன் அவசியம் உள்ளது. அதற்கேற்ப திமுகவின் அணுகுமுறை இருக்க வேண்டும். கூட்டணிக் கட்சிகளை மதிப்பதில் திமுகவை இன்றைக்கும் எந்தக் குறையும் சொல்ல முடியாது. இதே நிலை தொடர வேண்டும்.
கடந்த 2021- தேர்தலில் திமுக ஒதுக்கிய குறைந்த தொகுதிகளை ஏற்றுக்கொண்டோம். அது மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்டது கிடையாது. இதுதான் கட்சி வரலாற்றிலேயே முதல் முறையாக மிகமிகக் குறைந்த தொகுதியில் ஒப்பந்தம் செய்துகொண்டு போட்டியிட்டது. அத்தகைய அணுகுமுறை வரும் தேர்தலில் தொடரக்கூடாது.
2026 சட்ட சபை தேர்தலில் கூடுதல் இடங்களில் போட்டியிட வேண்டும் என்பதும், சட்ட சபை உறுப்பினர்களின் எண்ணிக்கை பலத்தை அதிகரிக்க வேண்டும் என்பதும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாட்டு தீர்மானமாகும். சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்கள் இருப்பதால், கடந்த தேர்தலின்போது மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை திமுக அரசாங்கம் மேலும் நிறைவேற்ற வேண்டும்" இவ்வாறு அவர் கூறினார்.