

சென்னை,
சொத்துக்குவிப்பு வழக்கில் முதல் குற்றவாளி என்று உச்சநீதிமன்றத்தால் தீர்ப்பளிக்கப்பட்ட, மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் உருவப்படத்தை, மக்களாட்சித் தத்துவத்தின் மாண்பாகத் திகழும் சட்டசபையில், பேரவைத்தலைவர் திறந்துவைப்பதற்கு தி.மு.க. சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். பேரவைத்தலைவருக்கு சபையின் நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்த மட்டுமே அதிகாரம் இருக்கிறதே தவிர, சபையின் கண்ணியத்தையும், கவுரவத்தையும் குறைக்கும் வகையிலோ, மாசுபடுத்திடும் வகையிலோ, ஓர் ஊழல் குற்றவாளியின் படத்தை அங்கு திறப்பதற்கு எவ்வித அதிகாரமும், தார்மீக உரிமையும் இல்லை.
அரசியல் சட்ட நெறிமுறைகளுக்கு உட்பட்டுதான் சட்டமன்ற விதிகள் உருவாக்கப்பட வேண்டும் என்று வரையறுக்கப்பட்டுள்ளபோது, அந்த அரசியல் சட்ட நெறிமுறைகளுக்கே எதிராக ஊழல் குற்றவாளி ஒருவரின் படத்தை சட்டமன்றத்திற்குள் திறந்து வைப்பது சட்டமன்ற வரலாற்றில் ஒரு கருப்பு நடவடிக்கையாகும்.
தீர்ப்பு வெளிவந்த நேரத்தில் ஜெயலலிதா உயிருடன் இல்லை என்ற காரணத்தால் மட்டுமே அவருக்கு சிறை தண்டனை விதிக்கப்படவில்லையே தவிர, பெங்களூர் சிறப்பு நீதிமன்ற நீதிபதி மைக்கேல் டி குன்ஹா அளித்த தீர்ப்பை உச்சநீதிமன்றம் அப்படியே அட்சரம் பிசகாமல் ஏற்றுக் கொண்டிருக்கிறது என்பதுதான் உண்மை. கர்நாடக உயர்நீதிமன்றம் கூட ஜெயலலிதா ஊழல் செய்யவில்லை என்று கூறவில்லை. அந்த தீர்ப்பின் 915-வது பக்கத்தில், ஒரு தப்புக்கணக்கைப் போட்டு, கூட்டல் பிழை செய்து, அதன்மூலம் கூட ஜெயலலிதா 8.12 சதவீதம் வருமானத்துக்கு அதிகமாக சொத்துக் குவித்துள்ளார் என்றே நீதிபதி சுட்டிக்காட்டி இருந்ததை இங்கு நினைவுபடுத்த விரும்புகிறேன்.
ஊழல் குற்றவாளியின் படத்தை சட்டசபைக் உள்ளேயே திறந்து வைக்கவும், அவையின் கண்ணியத்தையும், உரிமையையும் பேரவைத்தலைவரே மீறவும் முற்பட்டு இருப்பது, ஜனநாயக நெறிமுறைகளையும், மக்களாட்சி தத்துவத்தின் மாண்புகளையும் ஆழக்குழி தோண்டிப் புதைக்க பேரவைத்தலைவர் துணிந்து விட்டார் என்பதை வெளிக்காட்டுகிறது.
இதன்மூலம், சட்டமன்றத்தின் மாண்பிற்கு உயிரோட்டமுள்ள சின்னமாகத் திகழும் பேரவைத்தலைவர் பதவியில் அமர்ந்திருக்கும் தனபால், பேரவைத்தலைவருக்கு உரிய மாண்பை இழந்து நிற்கிறார். இது தமிழகத்திற்கு ஏற்பட்டுள்ள மிகப்பெரிய இழுக்கு. குறிப்பாக, ஜெயலலிதாவின் படங்களை அரசு அலுவலகங்கள் மற்றும் அரசின் செயல்பாடுகளில் பயன்படுத்துவது குறித்து தி.மு.க. சார்பில் தொடுக்கப்பட்ட வழக்கு உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவிருக்கின்ற நிலையில், அவசர அவசரமாக ஜெயலலிதா படத்தை பேரவைத்தலைவர் திறந்து வைப்பது, உயர்நீதிமன்ற மாண்பை மீறும் செயல் என்றே கருதுகிறேன்.
ஆகவே, அரசியல் சட்டத்திற்கும், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கும் விரோதமாக ஜெயலலிதாவின் படத்தை தமிழக சட்டமன்றத்தில் திறந்து வைத்து, ஏற்கனவே அந்த மாமன்றத்தில் திறந்து வைக்கப்பட்டுள்ள திருவுருவப் படங்களின் மாண்பைக் குறைத்திடும் மாபெரும் தவறை செய்யக்கூடாது என்று பேரவைத்தலைவரை, பிரதான எதிர்கட்சியான தி.மு.க. சார்பில் மன்றாடி கேட்டுக் கொள்வது எனது கடமையாகும். பொதுவாழ்வில் நேர்மை, அரசியலில் நல்லொழுக்கம் என்ற உயர்ந்த கோட்பாடுகளே சட்டமன்ற ஜனநாயகத்தின் இலக்கணமாக திகழ வேண்டும். ஆகவே, மக்களாட்சித் தத்துவத்தின் அடித்தளமாக விளங்கும் சட்டமன்றத்தின் மாண்பினை இழிவுபடுத்தும் போக்கை பேரவைத் தலைவர் உடனே கைவிட வேண்டும். இவ்வாறு அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.
அண்ணா அறிவாலயத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த மு.க.ஸ்டாலின், ஜெயலலிதா படம் சட்டசபையில் வைப்பது கண்டனத்துக்குரியது. இந்த விழாவில் தி.மு.க. நிச்சயம் பங்கேற்காது என்று தெரிவித்தார்.
தமிழக சட்டசபையில் ஜெயலலிதா உருவப்படத்தை திறக்கக்கூடாது என்றும், குற்ற வழக்கில் தண்டனை பெற்றவருக்கு புகழ்பாட கூடாது என்றும் சபாநாயகரிடம், தி.மு.க. எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன் மனு அளித்தார்.
அதில், ஊழல் வழக்கில் தண்டனை பெற்ற குற்றவாளிகளின் புகைப்படத்தை சட்டசபையில் திறந்து வைக்கவேண்டும் என்று இதுவரை பதவியில் இருந்த சபாநாயகர்கள் ஒருபோதும் நினைத்தது இல்லை. பொதுவாழ்வில் இருப்பவர்கள் நேர்மையாக இருக்கவேண்டும் என்பது தான் இந்திய ஜனநாயகத்தின் மைல்கல் ஆகும். ஆனால் சுப்ரீம் கோர்ட்டால் ஊழல் வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட ஜெயலலிதாவின் உருவப்பட்டத்தை சட்டசபையில் திறப்பது என்பது, சட்டத்தின்படியும், அறநெறியின்படியும் ஏற்கமுடியாத ஒன்று என்று கூறியுள்ளார்.
மேலும் அவர் கூறியிருப்பதாவது:-
அரசு அலுவலகங்கள், மாநகராட்சி உள்பட உள்ளாட்சி அலுவலகங்கள், அரசு நலத்திட்டங்கள், தமிழக அரசு வழங்கும் மாணவர்களின் புத்தகப்பைகள் மற்றும் புத்தகங்கள் ஆகியவற்றில் ஊழல் வழக்கில் தண்டனை பெற்ற ஜெயலலிதா புகைப்படம் இடம்பெறக்கூடாது என்று நான் தொடர்ந்த வழக்கு, சென்னை ஐகோர்ட்டில் நிலுவையில் உள்ளது. இந்த வழக்கு இன்று (திங்கட்கிழமை) விசாரணைக்கு வருகிறது. ஒரு வழக்கு ஐகோர்ட்டில் நிலுவையில் இருக்கும்போது, அந்த வழக்கு முடிவுக்கு வரும் வரை பொறுத்திருக்கவேண்டும். ஒரு பொறுப்புள்ள எம்.எல்.ஏ. எனும் அடிப்படையில், இந்த சட்டசபையில் பாரம்பரியம், கண்ணியம், மாண்பு உள்ளிட்டவைகளை பாதுகாக்கும் விதமாக நல்லெண்ண அடிப்படையில் சட்டசபை அரங்கில் ஜெயலலிதாவின் உருவப்படத்தை திறக்கக்கூடாது என்று கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இதேபோல கடிதத்தை தமிழக சட்டசபை செயலாளருக்கும் அவர் வழங்கியுள்ளார்.