மத்திய அரசின் மிரட்டலுக்கு தி.மு.க. கிளைச் செயலாளர்கள் கூட பயப்பட மாட்டார்கள் -அமைச்சர் பேச்சு

மத்திய அரசின் மிரட்டலுக்கு தி.மு.க.வின் கிளைச் செயலாளர்கள் கூட பயப்பட மாட்டார்கள் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறினார்.
மத்திய அரசின் மிரட்டலுக்கு தி.மு.க. கிளைச் செயலாளர்கள் கூட பயப்பட மாட்டார்கள் -அமைச்சர் பேச்சு
Published on

நாகப்பட்டினம்,

நாகை மாவட்ட தி.மு.க. மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கும் விழா நாகை இ.ஜி.எஸ். பிள்ளை கல்லூரியில் நேற்று நடந்தது. விழாவுக்கு தி.மு.க. மாவட்ட செயலாளரும், தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவருமான கவுதமன் தலைமை தாங்கினார். அமைச்சர் ரகுபதி, தாட்கோ தலைவர் மதிவாணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நாகை நகர செயலாளரும், நகர்மன்ற தலைவருமான மாரிமுத்து வரவேற்றார்.

விழாவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு தி.மு.க. மூத்த முன்னோடிகள் 700 பேருக்கு பொற்கிழி, 350 பெண்களுக்கு இலவச தையல் எந்திரம், 500 ஆட்டோ டிரைவர்களுக்கு சீருடை மற்றும் காப்பீட்டு திட்ட அடையாள அட்டை ஆகியவற்றை வழங்கினார். மேலும் தி.மு.க. மாவட்ட அலுவலகம் கட்டுமான பணியை மேடையில் இருந்தபடியே தொடங்கி வைத்தார்.

பின்னர் அவர் பேசியதாவது:-

சிறப்பான ஆட்சி

தமிழக முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்று 2 ஆண்டு காலம் சிறப்பான திராவிட மாடல் ஆட்சியை நடத்தி வருகிறார். இதைக்கண்டு பா.ஜ.க.வும், அ.தி.மு.க.வும் வயிற்றெரிச்சல் அடைகின்றனர். பா.ஜ.க. அரசு சி.பி.ஐ., அமலாக்க துறை ஆகியவற்றை சார்பு அணிகளாக வைத்து தமிழ்நாட்டில் சிறப்பாக நடைபெறும் ஆட்சியை மிரட்டுகிறது. தேர்தல் காலங்களில் சி.பி.ஐ.யை ஏவி விட்டு ரெய்டு நடத்த செய்கிறார்கள்.

பயப்பட மாட்டார்கள்

மத்திய அரசின் இந்த மிரட்டலுக்கு தி.மு.க.வின் கிளை செயலாளர்கள் கூட பயப்பட மாட்டார்கள். மத்திய அரசின் மிரட்டலுக்கு அடிபணிய நாங்கள் ஒன்றும் எடப்பாடி பழனிசாமியோ, ஓ.பன்னீர்செல்வமோ இல்லை.

நாங்கள் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்பதை மறந்து விடக்கூடாது. ஒரு பக்கம் மத்திய அரசு என்றால், மற்றொரு பக்கம் அ.தி.மு.க.வினர், அமைச்சர் செந்தில்பாலாஜியை கைது செய்யக்கோரி ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர்.

விரட்டியடிக்க வேண்டும்

அ.தி.மு.க.வுக்கு சிம்ம சொப்பனமாக நமது முதல்-அமைச்சர் திகழ்ந்து வருகிறார். மத்திய அரசை எதிர்த்து பீகார் மாநிலம் பாட்னாவில் நடக்கும் எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் பங்கேற்க நமது முதல்-அமைச்சர் சென்றுள்ளார். மத்திய பா.ஜ.க. அரசை விரட்டியடிப்பதை கலைஞர் நூற்றாண்டு விழாவின் பரிசாக நாம் கொடுக்க வேண்டும்.

கடந்த சட்டசபை தேர்தலில் பா.ஜ.க.வின் அடிமையான அ.தி.மு.க.வை ஓட, ஓட விரட்டியடித்தீர்கள். அதுபோல் வருகிற நாடாளுமன்ற தேர்தலில் அடிமைகளின் எஜமானர்களான பா.ஜ.க.வையும் ஓட, ஓட விரட்டியடிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com