

கடலூர்,
கடலூரில் தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் எம்.எல்.ஏ. செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகும், ஆட்சியாளர்களின் கட்டுப்பாட்டில்தான் தமிழக காவல்துறை உள்ளது. தமிழக வாழ்வுரிமை கட்சியினர் வரையும் சுவர் விளம்பரங்களை அழித்து, நிர்வாகிகளுக்கு கொலைமிரட்டல் விடுத்து வருகின்றனர். இதுதொடர்பாக புதுச்சத்திரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தும், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
அதுமட்டுமின்றி சட்டமன்ற தேர்தலில் மனுதாக்கல் செய்ததில், 30 தொகுதிகளில் எங்கள் வேட்புமனுக்கள் காரணமின்றி தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இது, ஜனநாயக உரிமைகளை பறிக்கிற ஆட்சியாளர்களின் நடவடிக்கை என குற்றம் சாட்டுகிறோம். எல்லாத்துறைகளிலும் மேல்முறையீட்டிற்கு வாய்ப்புள்ளது.
வேட்புமனுவை தள்ளுபடி செய்தால், அதற்கு மேல்முறையீடு செய்யும் முறை இல்லை.இது ஒரு வெட்கக்கேடான நிலை. பண்ருட்டியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளரை ஆளுங்கட்சி (தி.மு.க.) கட்டாயப்படுத்தி நிறுத்தியிருப்பது தமிழக வாழ்வுரிமை கட்சி, வி.சி.க. இடையே மோதலை ஏற்படுத்த முயற்சிக்கும் செயல் ஆகும். இவ்வாறு அவர் கூறினார்.