தி.மு.க. ஓட்டுகளை ரஜினிகாந்த், கமல்ஹாசன் பிரிப்பார்கள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி

ரஜினிகாந்த், கமல்ஹாசன் தி.மு.க. ஓட்டுகளை பிரிப்பார்கள். அ.தி.மு.க. ஓட்டு வங்கியை தொட முடியாது என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.
தி.மு.க. ஓட்டுகளை ரஜினிகாந்த், கமல்ஹாசன் பிரிப்பார்கள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி
Published on

சென்னை,

தமிழக மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அமைச்சர் ஜெயக்குமார் அளித்த பதில்களும் வருமாறு:-

கேள்வி:- திரிபுராவை போன்று தமிழகத்திலும் பா.ஜ.க. ஆட்சி அமையும் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியிருக்கிறாரே?

பதில்:- ஆட்சியை பிடிக்க வேண்டும் என்று எல்லோருக்கும் தான் ஆசை இருக்கும். அந்த ஆசை பிரதமருக்கு இருப்பதில் தப்பு இல்லை. ஆனால் முடிவு செய்ய வேண்டியது மக்கள் தான்.

தமிழக வரலாற்றை எடுத்துக்கொண்டால் அதிக நாட்கள் ஆண்டு கொண்டிருக்கிற இயக்கம் அ.தி.மு.க. தான். வருங்காலத்திலும் தமிழ்நாட்டில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவின் அரசு தான் நடைபெறும். இதில் இருந்து தமிழ்நாட்டு மக்கள் எந்த நிலையிலும் மாற மாட்டார்கள்.

கேள்வி:- ரஜினிகாந்த், கமல்ஹாசன் அரசியல் வருகையால் அ.தி.மு.க. வாக்கு வங்கி குறையுமா?

பதில்:- அ.தி.மு.க.வுக்கு 45 முதல் 50 சதவீதம் வரை ஓட்டு வங்கி உள்ளது. இதை யாரும் தொட முடியாது. ரஜினிகாந்த் டி.வி. ஆரம்பிக்கிறார். கட்சி ஆரம்பிக்கப்போகிறார். அவரை பற்றி கவலைப்பட வேண்டியது தி.மு.க.வும் மற்ற கட்சிகளும் தான்.

கமல்ஹாசன் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டால், தி.மு.க. மற்றும் மற்ற கட்சிகளின் ஓட்டுகளை தான் பிரிப்பார்.

கேள்வி:- மத்திய அரசு அனைவரின் கணினி செயல்பாடுகளை கண்காணிக்க உத்தரவிட்டுள்ளதே?

பதில்:- தொழில்நுட்ப வளர்ச்சியால் உலகம் முழுவதும் பயங்கரவாதம் இன்றைக்கு வளர்ந்து இருக்கிறது. எனவே பயங்கரவாதத்தை எந்தவிதத்திலும் அனுமதிக்க முடியாது. அதற்கு இந்த விஷயம் நல்லதாக அமையும். அதே நேரத்தில் இந்த உத்தரவு உயிரை காப்பாற்றுவதற்கு டாக்டர் கையில் இருக்கிற கத்தி போன்று இருக்க வேண்டும். கொலைகாரன் கையில் இருக்கிற கத்தி போன்று இருக்க கூடாது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com