தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுக்கு ஏன் உரிமைக்குழு நோட்டீஸ் அனுப்பியது? - ஐகோர்ட்டில், அரசின் சிறப்பு மூத்த வக்கீல் விளக்கம்

தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுக்கு எதிராக உரிமைக்குழு ஏன் நோட்டீஸ் அனுப்பியது? என்பது குறித்து விளக்கம் அளித்து தமிழக அரசின் சிறப்பு மூத்த வக்கீல் ஐகோர்ட்டில் வாதிட்டார்.
தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுக்கு ஏன் உரிமைக்குழு நோட்டீஸ் அனுப்பியது? - ஐகோர்ட்டில், அரசின் சிறப்பு மூத்த வக்கீல் விளக்கம்
Published on

சென்னை,

தமிழகத்தில் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்களை சட்டமன்றத்துக்குள் கொண்டு வந்து காட்டிய தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் மீது நடவடிக்கை எடுக்க உரிமைக்குழுவுக்கு பரிந்துரைக்கப்பட்டது. இதன் அடிப்படையில் உரிமைக்குழு நோட்டீஸ் அனுப்பியது. இந்த நோட்டீசை ரத்து செய்யக்கோரி தி.மு.க. தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள், சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, உரிமைக்குழு அனுப்பிய நோட்டீசுக்கு தடை விதித்து.

கடந்த 3 ஆண்டுகளாக நிலுவையில் இருந்து வரும் இந்த வழக்கு இறுதி விசாரணைக்காக ஐகோர்ட்டு தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் முன்பு பட்டியலிடப்பட்டது. இந்த வழக்கு நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தபோது, தி.மு.க., எம்.எல்.ஏக்கள் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல்கள் சண்முகசுந்தரம், என்.ஆர்.இளங்கோ உள்ளிட்டோர், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசின் பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிடக்கோரி கவர்னரிடம் மனு கொடுத்ததால், சம்பவம் நடந்து பல நாட்களுக்கு பின்னர் தி.மு.க. உறுப்பினர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க உரிமைக்குழுவுக்கு சபாநாயகர் உத்தரவிட்டதாக வாதிட்டனர்.

இந்தநிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, சட்டமன்ற செயலாளர் சார்பில் அட்வகேட் ஜெனரல் விஜய்நாராயண், உரிமைக்குழு சார்பில் தமிழக அரசின் சிறப்பு மூத்த வக்கீல் ஏ.எல்.சோமயாஜி ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர்.

அட்வகேட் ஜெனரல் தன் வாதத்தில், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசுக்கு பெரும்பான்மை குறைவாக இருந்ததால் தான் தி.மு.க. உறுப்பினர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க உரிமை குழு நோட்டீஸ் அனுப்பியது என்று மனுதாரர்கள் தரப்பு கூறுவது தவறு. இந்த அரசு ஆரம்பம் முதல் இதுநாள் வரை எந்த தருணத்திலும் பெரும்பான்மையை இழக்கவில்லை.

இப்போதும் பெரும்பான்மையோடு அரசு செயல்பட்டு வருகிறது. அவையின் மாண்பை அவமதிக்கும் வகையில் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட புகையிலை பொருளை கொண்டு வந்ததால் 21 தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சபாநாயகர் உரிமைக்குழு விசாரணைக்கு பரிந்துரைத்தார் என்று வாதிட்டார்.

தமிழக அரசின் சிறப்பு மூத்த வக்கீல் ஏ.எல்.சோமயாஜி வாதிடும்போது, மனுதாரர்களுக்கு உரிமைக்குழு நோட்டீஸ் மட்டுமே அனுப்பியுள்ளது. இந்த பிரச்சினை மீது எந்த ஒரு உத்தரவும் பிறப்பிக்காத நிலையில் முன்கூட்டியே இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சபையின் கண்ணியத்தை மீறும் வகையில், தடை செய்யப்பட்ட பொருளை கொண்டு வந்தது, உரிமை மீறலா? இல்லையா? என ஆய்வு செய்யவே சபாநாயகர் இந்த விவகாரத்தை உரிமைக்குழுவுக்கு அனுப்பி வைத்தார். இந்த பிரச்சினை ஏற்கனவே பலமுறை சட்டசபையில் எழுப்பப்பட்டு, அரசு சார்பில் உரிய பதிலும் அளிக்கப்பட்டுள்ளது. சட்டமன்ற உறுப்பினர்கள், அவையின் கண்ணியத்தை காக்க வேண்டும் என்று ஏற்கனவே சுப்ரீம் கோர்ட்டு பல தீர்ப்புகள் பிறப்பித்துள்ளது என்று கூறினார்.

இவரது வாதம் முடிவடையாததால், இந்த வழக்கு இன்று (வெள்ளிக்கிழமை) மீண்டும் விசாரணைக்கு வருகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com