

சென்னை,
அமைச்சர் கே.என். நேரு மற்றும் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி இருவரும் சென்னை அண்ணா அறிவாலயத்தில் கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது திமுக அமைப்புச் செயலாளர் ஆர். எஸ். பாரதி பேசியதாவது;
”அமைச்சர் கே.என். நேரு மீது சிபிஐ விசாரணை நடந்துகொண்டிருந்த போது, அமலாக்கத்துறை சில ஆவணங்களை எடுத்ததாகச் சொல்கிறார்கள். இதனைத் தொடர்ந்து அமைச்சர், சிபிஐ வழக்கை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த முக்கிய வழக்கை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. சிபிஐ வழக்கு ரத்து செய்யப்பட்டதால் அமலாக்கத்துறையிடம் போதிய ஆதாரங்கள் இல்லை என்றாலும் அவர்கள் தமிழ்நாடு அரசை நடவடிக்கை எடுக்கக் கேட்டுக்கொண்டனர்.
கே.என். நேருவை கட்சியின் மூத்த தலைவர் என்றோ, கட்சியின் முதன்மைச் செயலாளர் என்றோ கூடப் பார்க்காமல் உடனடியாக லஞ்ச ஒழிப்புத் துறை மூலம் விரிவான விசாரணைக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். தற்போது அந்த விசாரணை நடைபெற்று வருகிறது.
அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் இன்பதுரை தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், தமிழ்நாடு அரசு ஏற்கனவே விசாரணை நடத்திக் கொண்டிருப்பதைக் கருத்தில் கொண்டு, முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்ய உத்தரவிட்டுள்ளது. இது ஒன்றும் பின்னடைவு அல்ல, திமுகவின் சட்டத்துறை இதனைச் சட்டரீதியாகச் சந்தித்து முறியடிக்கத் தயாராக இருக்கிறது.
அமைச்சர் கே.என்.நேரு அவர்கள் மீது முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பல வழக்குகளை தொடுத்திருக்கிறார். அத்தனை வழக்குகளையும் எதிர்கொண்டு வென்று காட்டியவர்தான் கழக முதன்மைச் செயலாளர் அமைச்சர் கே.என்.நேரு. தட்டத் தட்ட பந்து எழும்புவது போல இன்னும் தீவிரமாகப் பணியாற்றுவார். கே.என்.நேரு மீதான பொய் வழக்கைச் சட்டரீதியாக எதிர்கொண்டு திமுக முறியடிக்கும்
இவ்வாறு அவர் தெரிவித்தார்.