கூட்டணி கட்சிகளுக்கு தி.மு.க. தொகுதிகளை குறைத்து கொடுக்கமாட்டார்கள் - செல்வப்பெருந்தகை நம்பிக்கை


கூட்டணி கட்சிகளுக்கு தி.மு.க. தொகுதிகளை குறைத்து கொடுக்கமாட்டார்கள் - செல்வப்பெருந்தகை நம்பிக்கை
x

கோப்புப்படம்

தி.மு.க.வின் தேர்தல் வாக்குறுதிகளில் 90 சதவீதம் நிறைவேற்றியுள்ளார்கள் என்று செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

சென்னை,

சென்னை சத்தியமூர்த்திபவனில் நேற்று, அகில இந்திய அமைப்புசாரா தொழிலாளர்கள் மற்றும் பணியாளர் காங்கிரசின் மாநில மாநாடு நடந்தது.

மாநாட்டுக்கு, அமைப்பின் மாநில தலைவர் மகேஷ்வரன் தலைமை தாங்கினார். அகில இந்திய அமைப்புசாரா தொழிலாளர்கள் மற்றும் பணியாளர் காங்கிரஸ் தேசிய தலைவர் உதித்ராஜ் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை, முன்னாள் தலைவர் கே.வி.தங்கபாலு, விஷ்ணுபிரசாத் எம்.பி. உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

பின்னர், செய்தியாளர்கள் சந்திப்பில் செல்வப்பெருந்தகை கூறியதாவது:-

புதிய கல்வி கொள்கையை ஏற்றுக்கொண்டால் தான் தமிழகத்திற்கு நிதி தருவோம் என மத்திய அரசு கூறுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது. நடப்பாண்டில் தனியார் பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்க தமிழக அரசு உத்திரவாதம் தர வேண்டும். மக்கள் தொகை கணக்கெடுப்பை மத்திய அரசு தள்ளிப்போடக்கூடாது. அடுத்த ஆண்டு தொடங்குவோம் என்று கூறுவது ஏமாற்று வேலை.

சட்டப்பேரவை தேர்தல் பணிகளை தொடங்கிவிட்டோம். இந்தியா கூட்டணியை பொருத்தவரையில் தமிழ்நாட்டில் கூட்டணியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தான் தீர்மானிக்கிறார். இந்தியா கூட்டணிக்கு தே.மு.தி.க. மட்டுமல்ல யார் வந்தாலும் வரவேற்போம். நாங்கள் தேசிய கட்சி என்பதால் கூடுதல் இடங்கள் குறித்து அகில இந்திய தலைமை தான் முடிவு செய்யும்.

காங்கிரஸ் கட்சியை பொருத்தவரையில் 234 தொகுதிகளை கொடுத்தாலும் அதை விரும்பி ஏற்றுக்கொள்வோம். எங்கள் கூட்டணியில் ஒரு செங்கலைக் கூட யாராலும் எடுக்க முடியாது. இந்தியா கூட்டணில் இணைவதற்கே பெரும்பாலான கட்சிகள் விருப்பம் தெரிவித்துள்ளது. சட்டப்பேரவை தேர்தலில் கூட்டணி கட்சிகளுக்கு தி.மு.க. தொகுதிகளை குறைத்து கொடுக்கமாட்டார்கள் என நம்புகிறோம்.

தி.மு.க.வின் தேர்தல் வாக்குறுதிகளில் 90 சதவீதம் நிறைவேற்றியுள்ளார்கள். அரசியலுக்காக யார் எதை வேண்டுமானாலும் பேசலாம். அதே நேரத்தில் தேர்தல் அறிக்கையில் அறிவிக்காத திட்டங்களை கூட நிறைவேற்றியுள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

1 More update

Next Story