தி.மு.க. மகளிர் அணியினர் கருணாநிதி சமாதியில் அஞ்சலி

கருணாநிதி சமாதியில் தி.மு.க. மகளிரணி செயலாளர் கனிமொழி எம்.பி. தலைமையில் மகளிரணியினர் மெழுகுவர்த்தி ஏந்தி ஊர்வலமாக வந்து அஞ்சலி செலுத்தினர்.
தி.மு.க. மகளிர் அணியினர் கருணாநிதி சமாதியில் அஞ்சலி
Published on

சென்னை,

சென்னை மெரினா கடற்கரையோரம் அண்ணா நினைவிடம் அருகே உள்ள கருணாநிதி சமாதியில் ஏராளமானோர் தினமும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் சேப்பாக்கம் கலைவாணர் அரங்கம் அருகில் இருந்து தி.மு.க. மகளிரணி செயலாளர் கனிமொழி எம்.பி. தலைமையில், கிழக்கு மாவட்ட மகளிரணியினர் கருணாநிதி சமாதியில் அஞ்சலி செலுத்துவதற்காக நேற்று மாலை ஊர்வலமாக புறப்பட்டனர்.

கருணாநிதியின் உருவப்படம் பொறிக்கப்பட்டு மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வாகனம் ஊர்வலத்துக்கு முன்னதாக சென்றது. அதைத்தொடர்ந்து, கனிமொழி எம்.பி. தலைமையில், கிழக்கு மாவட்ட செயலாளர் சேகர்பாபு எம்.எல்.ஏ., மகளிரணியினர் மெழுகுவர்த்தி ஏந்தியபடி கருணாநிதி சமாதிக்கு வந்தனர்.

முன்னதாக, கருணாநிதியின் துணைவியார் ராஜாத்தியம்மாள் கருணாநிதி சமாதியில் அஞ்சலி செலுத்திவிட்டு, அங்கேயே கண்ணீர்விட்டு அழுதபடி இருந்தார். பின்னர் மெழுகுவர்த்தி ஏந்தி வந்த கனிமொழி, தன்னுடைய தாய் ராஜாத்தியம்மாளுடன் சேர்ந்து கருணாநிதி சமாதியில் அஞ்சலி செலுத்திவிட்டு, சமாதியை சுற்றி வந்தார்.

அதேபோல், தி.மு.க. பார்வையற்றோர் நற்பணி மன்றத்தினர் ஊர்வலமாக வந்து கருணாநிதி சமாதியில் அஞ்சலி செலுத்தினர்.

கவிஞர் வைரமுத்து மலேசியா தமிழர்களுடன் இணைந்து கருணாநிதி சமாதியில் நேற்று காலையில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறுகையில், கருணாநிதியின் பிறந்தநாளை உலகத்தமிழர்கள் கலைஞர் செம்மொழி திருநாள் என்று கொண்டாட வேண்டும் என்பது எங்கள் விண்ணப்பம். பாரத ரத்னா விருதுக்கு தகுதியானவர் கருணாநிதி என்று மத்திய அரசே உணரும் என்பதே என் எண்ணம். மு.க.ஸ்டாலின் தி.மு.க. வின் தலைவராக இருந்து வழிநடத்துவார் என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com