

சென்னை,
தமிழ்நாட்டில் நிலவும் சட்டம், ஒழுங்கு சீர்கேடு பெண்கள் - குழந்தைகள் பாதுகாப்பின்மை மற்றும் விலைவாசி உயர்வை கண்டித்து த.வெ.க. அரசுக்கு எதிராக, தி.மு.க. மகளிர் அணி சார்பில் மாவட்டத் தலைநகரங்களில் வருகிற 31-ம் தேதி அன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து திமுக தலைமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-
தமிழகத்தில் கொலை, கொள்ளை, போதைப் பொருள் விற்பனை ஆகியவை அதிகரித்து சட்டம் ஒழுங்கு பெரியளவில் சீர்கேட்டு இருப்பதோடு, பெண்களுக்கு எதிரான வன்முறை மற்றும் குழந்தைகள் கடத்தல் ஆகியவை மிகப்பெரிய அளவில் அதிகரித்து தமிழகத்தை பாதுகாப்பற்ற மாநிலமாக தவெக ஆட்சி கொண்டு வந்திருக்கிறது.
இதுபோன்ற குற்றச் செயல்களில் ஆளும் த.வெ.க.வினரே பெரிய அளவில் ஈடுபட்டிருப்பதாக செய்திகள் வெளிவருகின்றன. இந்த அரசு சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதற்கும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுப்பதற்கும், விலைவாசி உயர்வை கட்டுப்படுத்துவதற்கும் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.
ஒரு பாதுகாப்பற்ற மாநிலமாக தமிழகத்தை படுகுழியில் தள்ளி உள்ள த.வெ.க. அரசை கண்டித்து தி.மு.க. மகளிர் அணியின் சார்பில் வருகிற 31.10.2026 சனிக்கிழமை காலை 10.00 மணியளவில் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். இதில் மகளிர் அணியினர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.