தமிழ்நாட்டை பயங்கரவாதிகளின் புகலிடமாக மாற்றியதே திமுகவின் சாதனை - அன்புமணி

தமிழகத்தைக் காக்க வரும் தேர்தலில் திமுக வீழ்த்தப்பட வேண்டும் என அன்புமணி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டை பயங்கரவாதிகளின் புகலிடமாக மாற்றியதே திமுகவின் சாதனை - அன்புமணி
Published on

சென்னை,

பாமக தலைவர் அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது;-

பாகிஸ்தான் மற்றும் வங்கதேச பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்புடைய பயங்கரவாதிகள் 6 பேரை திருப்பூரில் டெல்லி காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பூரில் இருந்தபடியே இந்தியாவின் முதன்மை நகரங்களில் குண்டு வெடிப்புகளை நிகழ்த்துவது உள்ளிட்ட குற்றச்செயல்களுக்கான முன்னேற்பாடுகளில் ஈடுபட்டு வந்த அவர்களை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்கத் தவறியது திமுக அரசின் தோல்வியாகும்.

திருப்பூரின் பல்வேறு பகுதிகளில் போலியான ஆவணங்களுடன் தங்கியிருந்த வங்க தேசத்தைச் சேர்ந்த மிஜனூர் ரகுமான், முகமது ஷபாத், உமர், முகமது லிட்டன், முகமது ஜாகீத், முகமது உஜால் ஆகிய 6 பேரை டெல்லி பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு காவல்துறையினர் கடந்த வெள்ளிக்கிழமை கைது செய்து அழைத்துச் சென்றுள்ளனர். போலியான ஆவணங்களை பயன்படுத்தி, திருப்பூரில் உள்ள ஆயத்த ஆடை நிறுவனங்களில் அவர்கள் பணியாற்றியதாக மட்டுமே கருதப்பட்டு வந்த நிலையில், பாகிஸ்தான் மற்றும் வங்கதேச பயங்கரவாத அமைப்புகளுடன் அவர்களுக்கு தொடர்பு இருப்பதாக அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

திருப்பூரில் கைது செய்யப்பட்ட 6 பயங்கரவாதிகளும் வங்கதேசத்தைச் சேர்ந்தவர்கள். மேற்கு வங்காளத்தின் மால்டா பகுதியைச் சேர்ந்த பயங்கரவாதி உமர் பாரூக், வங்கதேசத்தைச் சேர்ந்த பயங்கரவாதி ரபியுல் இஸ்லாம் ஆகிய இருவரும் தான் திருப்பூரில் கைது செய்யப்பட்ட 6 பேரையும் பயங்கரவாத செயல்களுக்காக தேர்ந்தெடுத்துள்ளனர். இவர்கள் 8 பேரும் இப்போது வங்கதேசத்தில் முகாமிட்டிருக்கும் லஷ்கர்-இ-தோய்பா பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய ஷபிர் அகமது லோன் என்ற பயங்கவாத இயக்கத் தளபதியின் கட்டளைகளின்படி செயல்பட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது.

டெல்லியில் கடந்த 7-ஆம் தேதி சர்ச்சைக்குரிய சுவரொட்டிகளை ஒட்டியது உமர் பாரூக், ரபியுல் இஸ்லாம் ஆகியோர் தான் என்பது உறுதி செய்யப்பட்டிருப்பதாக காவல்துறை தெரிவித்துள்ளது. இந்தியாவின் பல நகரங்களில் குண்டுவெடிப்பு உள்ளிட்ட பயங்கரவாத செயல்களை நடத்துவதற்காக அவர்களும், திருப்பூரில் கைது செய்யப்பட்ட 6 பயங்கரவாதிகளும் உளவு பார்த்திருப்பதாகவும் விசாரணையில் உறுதியாகியிருக்கிறது.

டெல்லியில் செங்கோட்டை அல்லது மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதிகளில் குண்டுவெடிப்புகளை நிகழ்த்த அவர்கள் திட்டமிட்டிருந்ததாகவும், அதற்காக திருப்பூரில் தங்கியிருந்த 6 பேரையும் உமர் பாரூக், ரபியுல் இஸ்லாம் ஆகியோர் அழைத்துச் செல்ல திட்டமிருந்ததாகவும் தெரியவந்திருப்பதாக டெல்லி காவல்துறையின் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு கூடுதல் ஆணையர் பிரமோத்சிங் குஷ்வாகா தெரிவித்திருப்பதிலிருந்தே, கைதாவர்கள் அனைவரும் எவ்வளவு பயங்கரமான பின்னணி கொண்டவர்கள் என்பதை அறிய முடியும்.

ஆனால், டெல்லி காவல்துறையினர் வந்து திருப்பூரில் தங்கியிருந்த 6 பயங்கரவாதிகளையும் கைது செய்து அழைத்துச் செல்லும் வரை அவர்களின் பின்னணி குறித்து தமிழக காவல்துறையில் யாருக்கும், எதுவும் தெரியவில்லை. கோவை, திருப்பூர் போன்ற பகுதிகளில் எந்த நேரமும் பயங்கரவாதத் தாக்குதல்கள் நடத்தப் படலாம் என்ற ஆபத்து எப்போதும் நீடிக்கும் நிலையில், அது குறித்த எந்தக் கவலையும் இல்லாமல் தமிழக காவல்துறையினர் பல மாதங்களாக உறங்கிக் கொண்டிருந்தனர் என்பது இதன் மூலம் உறுதியாகியுள்ளது.

திருப்பூரில் இருந்து 6 வங்கதேச பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டு அழைத்துச் செல்லப்பட்ட பிறகும் திருப்பூர் மாநகர காவல்துறை ஆணையர் ராஜேந்திரனுக்கு கைதான பயங்கவாதிகள் குறித்து எதுவும் தெரியவில்லை. இப்போதும் கூட,‘‘கைது செய்யப்பட்ட 6 பேரின் பின்னணி குறித்தும் எங்களுக்கு எதுவும் தெரியாது. எங்களைப் பொருத்தவரையில் அவர்கள் மீது திருப்பூர் காவல்நிலையத்தில் அவர்கள் மீது எந்த வழக்கும் நிலுவையில் இல்லை’’ என்பதையே திருப்பூர் காவல் ஆணையர் மீண்டும், மீண்டும் கூறி வருகிறார்.

திமுக ஆட்சிக்கு வந்த நாள் முதலாகவே தமிழ்நாடு போதைப்பொருள்கள் கடத்துபவர்கள், பயங்கரவாத செயல்களில் ஈடுபடுவோரின் வேட்டைக்காடாக திகழ்ந்து வருகிறது. திமுகவின் அயலக பிரிவு நிர்வாகியாக இருந்த ஜாபர் சாதிக் என்பவர் கடந்த சில ஆண்டுகளில் ரூ.3000 கோடி மதிப்புள்ள போதைப் பொருள்களை கடத்திய நிலையில், அவரை தேசிய போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் கைது செய்யும் வரை தமிழக காவல்துறை தூங்கிக் கொண்டு தான் இருந்தது. இப்போதும் பயங்கரவாதிகளை கைது செய்யும் வரை தமிழக காவல்துறை தூங்கிக் கொண்டு தான் இருந்தது. தமிழக காவல்துறையின் செயல்திறன் இப்படித் தான் இருக்கிறது.

கோவையில் கடந்த 2022-ஆம் ஆண்டு அக்டோபர் 23-ஆம் தேதி சக்தி வாய்ந்த கார்குண்டு வெடித்ததில் ஜமீசா முபீன் என்ற பயங்கரவாதி உடல்சிதறி உயிரிழந்தார். ஆனால், இந்த குண்டுவெடிப்பை எரிவாயு சிலிண்டர் வெடிப்பு என்று கூறி மூடிமறைக்க திமுக அரசு முயன்றது. இந்த வழக்கை தேசிய புலனாய்வு அமைப்பு விசாரணை செய்து 17 பயங்கரவாதிகளை கைது செய்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. இப்படியாக பயங்கவாதச் செயல்களைத் தடுப்பதில் திமுக அரசு செயல்படாத அரசாகவே நீடித்து வருகிறது.

தமிழ்நாட்டை பயங்கரவாதிகளின் புகலிடமாக மாற்றியதற்காக தமிழக மக்களிடம் திமுக அரசு மன்னிப்பு கேட்க வேண்டும். தமிழ்நாட்டை திமுக ஆட்சி செய்தால் பயங்கரவாதிகளிடமிருந்து தமிழ்நாட்டு மக்களுக்கு எந்த வகையிலும் பாதுகாப்பு இல்லை. தமிழகத்தைக் காக்க வரும் தேர்தலில் திமுக வீழ்த்தப்பட வேண்டும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com