

திருவள்ளூர்,
திருவள்ளூரில் நடைபெற்று வரும் பொதுக்கூட்டத்தில் திமுக தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் ஆவடி, திருவள்ளூர், பூவிருந்தவல்லி, கும்மிடிப்பூண்டி, பொன்னேரி மற்றும் திருத்தணி ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிமுகம் செய்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழ்நாட்டின் வடக்கு வாசலான திருவள்ளூருக்கு வந்துள்ளேன். தமிழ்நாட்டுக்கு ஆபத்து எப்போதும் வடக்கில் இருந்துதான் வரும். வடக்கில் இருந்து வரும் என்டிஏ என்ற ஆபத்தை தடுத்து நிறுத்தும் தேர்தல் இது. எடப்பாடி பழனிசாமி இருக்கும் தைரியத்தில்தான் பாஜக ஆட்சி அமைக்க நினைக்கிறது. இந்த தேர்தலில் மக்கள் அளிக்கும் வாக்கு, என்டிஏக்கு நோ என்ட்ரியாக இருக்க வேண்டும்.
பாஜகவின் கிளைக்கழகம் தான் அதிமுக. அதிமுக ஆட்சிக்கு வந்தால் மும்மொழிக்கொள்கையை கொண்டு வருவோம் என பாஜகவினர் கூறி வருகின்றனர். வாய் மூடி இருக்க நாங்கள் அடிமை சாமி கிடையாது. தமிழ்நாடு என்றைக்குமே டெல்லிக்கு அவுட் ஆப் கண்ட்ரோல் என்கிற சவாலில் வெற்றி பெற வேண்டும்.
கூவத்தூரில் தவழ்ந்து, ஊழலில் திளைத்து, உரிமைகளை தொலைத்து, தமிழ்நாட்டை நாசப்படுத்திய பழனிசாமி ஆட்சியில் வளர்ச்சி நின்று போனது. பழனிசாமி ஆட்சியில் தமிழ்நாட்டின் வளர்ச்சி வெறும் 0.07 சதவீதம் மட்டுமே. ஆனால் இன்றைக்கு 11.19 சதவீதம் வளர்ச்சி. தமிழ்நாடு முழுக்க பரவலாக்கப்பட்ட வளர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறோம். இந்தியாவுக்கே ரோல் மாடலாக தமிழ்நாடு உள்ளது.
5 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாடு எப்படிப்பட்ட தலைவலியை சந்தித்தது என நினைத்துப் பாருங்கள். எத்தனை முறை அடித்து கேட்டாலும் அவர்களால் சாதனைகளை சொல்லி வாக்கு கேட்க முடியாது. வாய்க்கொழுப்பெடுத்து, அசிங்கமாக, அவதூறாக பழனிசாமி பேசி வருகிறார். கலைஞர் சொல்லிக் கொடுத்தது எல்லாம் உழைப்பு, உழைப்பு, உழைப்பு. உண்மையாக உழைத்தால் உலகம் நம்மை போற்றும்.
தமிழ்நாடு என்பது பலர் கண்ணை உறுத்துகிறது. தமிழ்நாடு என்று சொல்லக்கூடாது என்பது ஆர்.என்.ரவியின் குரல் அல்ல. அது ஆர்.எஸ்.எஸ். குரல். நான் உயிரோடு இருக்கும் வரை, திமுக இருக்கும் வரை தமிழ்நாட்டை தொட்டுப் பார்க்கும் தைரியம் உண்டா? தைரியம் இருந்தால் தட்சிணப் பிரதேசம் என மாற்ற முடியுமா? சட்டமன்றத் தேர்தலில் திமுக தேர்தல் அறிக்கை தான் சூப்பர் ஸ்டார். இவ்வாறு அவர் கூறினார்.