ஜெய் பீம் சர்ச்சை: பா.ம.க-வை விமர்சிக்கும் தி.மு.க.வின் முரசொலி

திமுக-வின் அதிகாரப்பூர்வ நாளிதழான முரசொலியில் ஜெய் பீம் சர்ச்சை குறித்து பா.ம.க.வை விமர்சித்துள்ளது.
ஜெய் பீம் சர்ச்சை: பா.ம.க-வை விமர்சிக்கும் தி.மு.க.வின் முரசொலி
Published on

சென்னை

த.செ.ஞானவேல் இயக்கத்தில் சூர்யா, மணிகண்டன், லிஜோமோல் ஜோஸ், ரஜிஷா விஜயன், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'ஜெய் பீம்'. அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் இப்படம் வெளியாகியுள்ளது. இப்படம் உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டது. படத்தை சூர்யா தயாரித்து, நடித்துள்ளார்.

இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள், பல்வேறு திரையுலக பிரபலங்கள் பாராட்டு தெரிவித்தனர். ஆனால், இந்தப் படத்திற்கு பாமக தரப்பில் எதிர்ப்பு கிளம்பியது. சமூக வலைத்தளங்களிலும் சூர்யாவுக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் பதிவுகள் வெளியிடப்பட்டன. அதேவேளையில், சூர்யாவுக்கு ஆதரவாகவும் பலர் குரல் கொடுத்து வருகின்றனர்.

சில அரசியல் கட்சியினரும் சூர்யாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். திமுக-வின் அதிகாரப்பூர்வ நாளிதழான முரசொலியில் ஜெய் பீம் சர்ச்சை குறித்து பா.ம.க.வை விமர்சித்துள்ளது.

நவம்பர் 16-ம் தேதி வெளியான முரசொலி நாளிதழில், ஜெய் பீம் (சிங்) இது என்ன புதுக்குழப்பம்? என்ற தலைப்பில் வெளியான கட்டுரையில் (ஜெய் பீம் சர்ச்சைக்குள்ளாகியுள்ளது. இந்த சர்ச்சையின் விளைவாக ஒரு புதிய படத் தயாரிப்பில் நடைபெற்ற கலாட்டா.. கற்பனை)

படத்தின் வில்லனின் வீடு… அது ஒரு பண்ணை பங்களா காட்சி அமைப்பின்படி பண்ணையார் தனது கூட்டாளிகளுக்கு விருந்து அளிக்கிறார் படத்தின் இயக்குநர் தனது உதவியாளரை அழைக்கிறார்.

இயக்குநர்:- என்னய்யா… நான் சொன்னபடி எல்லாம் சரியாயிருக்கான்னு பார்த்திட்டியா… சுவத்துல ஏதாவது காலண்டரை மாட்டிவைத்து நாளைக்கு படத்துக்கு ஏதாவது தலைவலி உண்டாக்கிடாதே… என இயக்குநர் உதவியாளரிடம் சொல்லுவது போல் ஆரம்பிக்கிறது இந்த கட்டுரை.

இயக்குநர் . லைட்ஸ் ஆன்.. ஸ்டார்ட் சவுண்ட.. ஸ்டார்ட் காமரா.. கிளாப்,… ஆக்ஷன்.. என டேக் என்று போகும்போது கட் கட் என முட்டுக்கட்டை போடுவதாகவும் இயக்குநர் ஏன் என கேட்க, டேபிள்ல மாம்பழம் இருக்கு. அது ஒரு கட்சி சின்னம் சார். விருந்து வைக்கும் வில்லன் வீட்டுல மாம்பழம், வில்லனை எங்கள் கட்சிக்காரரா காட்டிட்டாங்கன்னு எதிர்ப்பு வரக்கூடாது சார். அதான் என்பார். கூடையில இருந்து பழத்த எடுத்துட்டு மீண்டும் இயக்குநர் டேக் போவார். காட்சிப்படி உணவு பரிமாறுபவர் பண்ணையாரை பார்த்து அய்யா.. சாம்பார் போடவா, காரக்குழம்பு போடவான்னு கேட்க உதவி இயக்குநர் கட் போடுவார்.

இயக்குநர் இப்ப என்னய்யா எனக் கேட்க, டயலாக்-ல தப்பு, உணவு பரிமாறுபவர் அய்யான்னு கூப்பிடுறாரு… அய்யான்னு தானே சொல்வாங்க., எனக் இயக்குநர் கேட்பதாகவும் அதற்கு உதவி இயக்குநர் இங்க ஒரு கட்சித் தலைவரை அவரோட கட்சிக்காரர்களெல்லாம் அய்யான்னுதான் சொல்வாங்க… அதனால வில்லன் கேரக்டரை அய்யான்னு அழைச்சு, அழைச்சு எங்கள் தலைவரை வில்லனாக்கி விட்டார்கள் எனப் போராட்டம் ஆரம்பிச்சுடுவாங்களேன்னுதான் சார் கட் சொன்னேன் என்பார்.

காட்சிப்படி ஒரு பெரியவர் பண்ணையாரை பார்த்து விருந்துக்கு தம்பி வரலையா? எனக் கேட்க பண்ணையார் அன்பு தம்பியையா கேட்கறீங்கன்னு சொன்னதும் அங்க ஒரு கட். இப்ப எதுக்குய்யா கட் என இயக்குநர் அலற. பண்ணையார் மகன் பெயர் மாத்த சொல்லி அப்பவே வசனகர்த்தாகிட்ட சொன்னேன் அவர் மற்ந்துட்டாரு.

பேரில என்னய்யா பிரச்னைன்னு இயக்குநர் கேட்க பிரச்னையே இங்கதான் சார் உருவாகும் அந்த பேர் வேண்டாம். எனக் கூறி இப்படி பிரச்னை மேல பிரச்னை போக ஒரு கட்டத்துல பேக்கப் பேக்கப் இயக்குநர் கத்துனாராம். மனைவி வந்து என்னங்க எதாவது கெட்ட கனவு கண்டீங்களான்னு உலுக்கி எழுப்பிச்சாம்.

ஓ ஒண்ணுமில்லே… ஜெய் பீம் படத்தைப் பத்தி டி.வி.யிலே விவாதம் பார்த்தேன்… அப்படியே தூங்கிவிட்டேன். சாதி அரசியல் பிழைப்பு நடத்துவோர். இந்த நாட்டைப் படுத்தும் பாட்டுக்கு எப்போதுதான் விடிவு ஏற்படுமோ?

சாதிப் பிரிவு செய்தோர்

தம்மை உயர்த்துதற்கே

நீதிகள் சொன்னாரடி சகியே

நீதிகள் சொன்னாரடி

புரட்சிக் கவிஞர் என்று அந்தக் கட்டுரையில் குறிப்பிட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com