பரபரப்பாகும் அரசியல்களம்: கூடுதல் தொகுதிகளுக்கு தி.மு.க. கைவிரிப்பு: அதிர்ச்சியில் கூட்டணி கட்சிகள்

கூட்டணி கதவை அடைத்துவிட்டு, தொகுதி பங்கீட்டு பேச்சு வார்த்தையை விரைவில் தொடங்க தி.மு.க. திட்டமிட்டுள்ளது.
பரபரப்பாகும் அரசியல்களம்: கூடுதல் தொகுதிகளுக்கு தி.மு.க. கைவிரிப்பு: அதிர்ச்சியில் கூட்டணி கட்சிகள்
Published on

சென்னை,

கடந்த 2021-ம் ஆண்டு நடைபெற்ற 16-வது சட்டசபை தேர்தலில் வலுவான கூட்டணியுடன் களம் இறங்கிய தி.மு.க., இந்த முறை ஆளுங்கட்சி என்ற பலத்துடன் கூடுதல் கட்சிகளையும் கூட்டணிக்குள் கொண்டுவர முயற்சி மேற்கொண்டு வருகின்றது.

கடந்த முறை தி.மு.க. கூட்டணியில் தி.மு.க. - 173, காங்கிரஸ் - 25, விடுதலை சிறுத்தைகள் கட்சி - 6, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி - 6, இந்திய கம்யூனிஸ்டு கட்சி -6, ம.தி.மு.க. - 6, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் - 3, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி - 3, மனிதநேய மக்கள் கட்சி - 2, தமிழக வாழ்வுரிமை கட்சி, அகில இந்திய பார்வர்டு பிளாக், ஆதி தமிழர் பேரவை ஆகியவை தலா 1 தொகுதிகளிலும் போட்டியிட்டன.

தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க.

இந்த முறை, கூடுதலாக நடிகர் கமல்ஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மய்யமும் கூட்டணியில் இணைந்துள்ள நிலையில், மேலும் சில கட்சிகளையும் கூட்டணி வளையத்துக்குள் கொண்டுவர தி.மு.க. பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது.

நீண்ட இழுபறிக்கு பிறகு தே.மு.தி.க., தி.மு.க. கூட்டணியில் இணையும் என்று தெரிகிறது. அந்தக் கட்சிக்கு 6 தொகுதிகளும், ஒரு ராஜ்ய சபா சீட்டும் வழங்க உறுதியளிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதேபோல், கடந்த 2024-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலின்போது தி.மு.க. கூட்டணியில் இணைந்த மக்கள் நீதி மய்யத்துக்கு அப்போது தொகுதிகள் வழங்கப்படவில்லை. ஒரு ராஜ்ய சபா சீட் மட்டுமே வழங்கப்பட்டது. தற்போது, அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் எம்.பி.யாக இருந்து வருகிறார்.

கமல்ஹாசன் முடிவு

எனவே, வரும் சட்டசபை தேர்தலில் இரட்டை இலக்கத்தில் தொகுதிகளை பெற்று கட்சி நிர்வாகிகளை போட்டியிட வைக்க கமல்ஹாசன் முடிவு செய்துள்ளார். அப்போதுதான் கட்சியும் உயிர்ப்புடன் பயணிக்கும் என்பதால், அவர் இதில் உறுதியாக இருக்கிறார்.

ஆனால், தி.மு.க. தரப்பிலோ மக்கள் நீதி மய்யத்துக்கு 3 தொகுதிகள் மட்டும் வழங்க முடிவு செய்திருப்பதாக தெரிகிறது. மேலும், எஸ்.டி.பி.ஐ. கட்சியையும் கூட்டணிக்குள் கொண்டுவந்து 2 தொகுதிகளை வழங்கலாமா? என்றும் யோசித்து வருகிறது.

இந்த நிலையில், ஏற்கனவே தி.மு.க. கூட்டணியில் கடந்த சட்டசபை தேர்தல் முதல் இருந்து வரும் கட்சிகள் எல்லாம் இந்த முறை இரட்டை இலக்கத்தில் தொகுதிகளை கேட்டுபெற முடிவு செய்துள்ளது. காங்கிரஸ் கட்சியோ ஒரு படி மேலேப்போய், ஆட்சியிலும் பங்கு என்ற கோரிக்கையை முன்வைத்து வருகிறது.

கூட்டணி கட்சிகள் அதிர்ச்சி

ஆனால் விஜய்யின் அரசியல் வருகையால் கண்ணும் கருத்துமாக காய்களை நகர்த்தி வரும் தி.மு.க., ஏற்கனவே கூட்டணியில் தொடரும் கட்சிகளுக்கு கடந்த முறை ஒதுக்கப்பட்ட தொகுதிகளின் எண்ணிக்கையையே மீண்டும் ஒதுக்க முடிவு செய்திருப்பதாக தெரிகிறது. இதனால், கூட்டணி கட்சிகள் அதிர்ச்சி அடைந்துள்ளன.

விரைவில், கூட்டணி கதவை அடைத்துவிட்டு, தொகுதி பங்கீட்டு பேச்சு வார்த்தையையும் தொடங்க தி.மு.க. திட்டமிட்டுள்ளது. அனேகமாக, பிப்ரவரி முதல் வாரத்தில் இந்தப் பணிகள் எல்லாம் சுறுசுறுப்படையும் என்று தெரிகிறது.

தொகுதி பங்கீடு

தேசிய கட்சியான காங்கிரசுடன் முதலில் தொகுதி பங்கீட்டை முடிக்க தி.மு.க. முடிவு செய்துள்ளது. ஏனென்றால், காங்கிரஸ் கட்சியில் தொகுதி பங்கீடு குறித்து பேச்சு வார்த்தை நடத்த கடந்த மாதமே குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்தக் குழுவினரும் ஏற்கனவே, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து சென்றிருக்கிறார்கள்.

எனவே, காங்கிரஸ் கட்சியுடன் முதலில் தொகுதி பங்கீட்டை முடித்து, தொடர்ந்து மற்ற கட்சிகளுடன் பேச்சு வார்த்தையை தொடர தி.மு.க. திட்டமிட்டுள்ளது. ஏறக்குறைய, கடந்த முறை வழங்கப்பட்ட அதே தொகுதிகளே மீண்டும் ஒதுக்கப்படும் என தெரிகிறது.

பிரமாண்ட பொதுக்கூட்டம்

கூட்டணியில் இணைந்த புதிய கட்சிகளுக்கு அதில் ஏதாவது தொகுதிகளை ஒதுக்க வேண்டிய நிலை வந்தால், மாற்றிக் கொடுக்கவும் தி.மு.க. தலைமை முடிவு செய்துள்ளது.

தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்குள் இந்தப் பணிகளை எல்லாம் வெற்றிகரமாக முடித்து, அதன்பிறகு பிரசாரப் பணிகளில் மும்முரமாக ஈடுபடவும் தி.மு.க. தலைமை திட்டமிட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர்கள் ஆன சோனியாகாந்தி, மல்லிகார்ஜூன கார்கே, ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி உள்பட கூட்டணி கட்சி தலைவர்களையும் அழைத்து பிரமாண்ட பொதுக்கூட்டத்தை நடத்த திட்டமிடப்பட்டுள்ளன. எந்தெந்த ஊர்களில் பொதுக்கூட்டத்தை நடத்தலாம் என்றும் பட்டியல் தயாரிக்கப்பட்டு வருகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com