

தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று டி.என்.பி.எஸ்.சி குரூப்-2 தேர்வு நடந்தது. இந்த தேர்வை 26 ஆயிரத்து 459 பேர் எழுதினர்.
டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2 தேர்வு
தூத்துக்குடி மாவட்டத்தில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி) மூலம் நேற்று நடத்தப்பட்ட குரூப்-2, 2ஏ-ல் உள்ள பணிகளுக்கான தேர்வுகள் நேற்று காலை 9.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை நடந்தது.
தூத்துக்குடி, கோவில்பட்டி, ஸ்ரீவைகுண்டம் மற்றும் திருச்செந்தூர் 4 வட்டங்களில் உள்ள 105 தேர்வு மையங்களில் தேர்வு எழுதுவதற்கு மொத்தம் 30 ஆயிரத்து 789 பேர் தேர்வு விண்ணப்பித்து இருந்தனர்.
அதன்படி தூத்துக்குடியில் 51 தேர்வு மையங்களிலும், கோவில்பட்டியில் 32 மையங்களிலும், ஸ்ரீவைகுண்டத்தில் 6 மையங்களிலும், திருச்செந்தூரில் 16 மையங்களிலும் இந்த தேர்வு நடைபெற்றது. இந்த மையங்களில் மொத்தம் 26 ஆயிரத்து 459 பேர் தேர்வு எழுதினர். 4,330 பேர் தேர்வு எழுத வரவில்லை.
கலெக்டர் ஆய்வு
இந்த தேர்வு பணிக்கென 22 கண்காணிப்பு குழுக்கள் மற்றும் உதவி கலெக்டர் தலைமையில் 12 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு இருந்தது. இவர்கள் தேர்வு மையங்களுக்கு சென்று கண்காணித்தனர்.
தூத்துக்குடியில் நேற்று குரூப்-2, 2ஏ, தேர்வு நடந்த புனித மரியன்னை மேல்நிலைப்பள்ளியிலும், அரசு பாலிடெக்னிக் கல்லூரியிலும் கலெக்டர் செந்தில்ராஜ் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின்போது தூத்துக்குடி உதவி கலெக்டர் சிவசுப்பிரமணியன், தாசில்தார் செல்வகுமார் ஆகியோர் உடன் இருந்தனர்.