‘தமிழ் மக்களுக்காக அனைத்தையும் செய்’ - முதல்-அமைச்சராகும் விஜய்க்கு தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் அறிவுரை

விஜய் மூலம் தமிழ் மக்கள் வெற்றி பெற்றுள்ளனர் என எஸ்.ஏ.சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
‘தமிழ் மக்களுக்காக அனைத்தையும் செய்’ - முதல்-அமைச்சராகும் விஜய்க்கு தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் அறிவுரை
Published on

சென்னை,

தமிழக சட்டசபை தேர்தலில் விஜய்யின் த.வெ.க. 108 இடங்களை கைப்பற்றியது. த.வெ.க.வுக்கு காங்கிரஸ் கட்சியின் 5 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு கொடுத்திருந்தாலும், ஆட்சி அமைக்க 118 இடங்கள் தேவை என்ற நிலை ஏற்பட்டது. இதையடுத்து, பெரும்பான்மைக்கு தேவையான ஆதரவை திரட்டும் முயற்சியில் த.வெ.க. ஈடுபட்டது.

தங்களுக்கு ஆதரவு வழங்குமாறு தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள வி.சி.க., இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய யூனியன் முஸ்லிம் லீக்(ஐ.யூ.எம்.எல்.) ஆகிய கட்சிகளுக்கு த.வெ.க. அழைப்பு விடுத்தது. த.வெ.க.வின் அழைப்பை ஏற்று, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய இரு கட்சிகளும் விஜய்க்கு நிபந்தனையற்ற ஆதரவு கொடுப்பதாக அறிவித்தன.

தொடர்ந்து, நீண்ட இழுபறிக்கு பிறகு இன்று வி.சி.க. மற்றும் ஐ.யூ.எம்.எல். ஆகிய கட்சிகள் த.வெ.க.வுக்கு நிபந்தனையற்ற ஆதரவு வழங்குவதாக அறிவித்தன. இதன் மூலம் த.வெ.க. ஆட்சியமைப்பதற்கு தேவையான பெரும்பான்மை கிடைத்ததை தொடர்ந்து, த.வெ.க.வுக்கு ஆதரவு தெரிவித்த கட்சிகளின் தலைவர்களுடன் கவர்னரை சந்தித்த விஜய், த.வெ.க. ஆட்சியமைக்க உரிமை கோரினார்.

மேலும், பெரும்பான்மைக்கு 118 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு தேவை என்ற நிலையில் 120 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு கடிதத்தை கவர்னரிடம் த.வெ.க. தலைவர் விஜய் வழங்கினார். அந்த கடிதத்தை ஏற்றுக்கொண்ட கவர்னர், த.வெ.க. தலைமையிலான அரசு நாளை பதவியேற்க அழைப்பு விடுத்துள்ளார். அதன்படி, நாளை காலை 10 மணிக்கு பதவியேற்பு விழா நடைபெற உள்ளது. த.வெ.க. தலைவர் விஜய் நாளை தமிழக முதல்-அமைச்சராக பதவியேற்க உள்ளார்.

இந்த நிலையில், விஜய்யின் தந்தையும், இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகரிடம், அவரது மகன் நாளை தமிழக முதல்-அமைச்சராக பதவியேற்க உள்ளது குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது, “நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். நான் என்ன செய்தாலும், அதை என் மகனுக்காக மட்டுமே செய்கிறேன். இறுதியாக, விஜய் மூலம் தமிழ் மக்கள் வெற்றி பெற்றுள்ளனர். விஜய்க்கு நான் சொல்ல விரும்புவது என்னவென்றால், தமிழ் மக்களுக்காக அனைத்தையும் செய்" என்று தெரிவித்தார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com