எம்.எல்.ஏ.க்கள் கேள்விக்கு அமைச்சர் போல பதில் சொல்வதா? சபாநாயகருக்கு ஜெயக்குமார் கண்டனம்

சட்டசபையில் நாட்டாமையாக பஞ்சாயத்து செய்யக்கூடாது என்றும், எம்.எல்.ஏ.க்களின் கேள்விகளுக்கு தானே அமைச்சர் போல பதில் சொல்லக்கூடாது என்றும் சபாநாயகர் அப்பாவுக்கு, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.
எம்.எல்.ஏ.க்கள் கேள்விக்கு அமைச்சர் போல பதில் சொல்வதா? சபாநாயகருக்கு ஜெயக்குமார் கண்டனம்
Published on

சென்னை,

கடந்த 11-ந்தேதி தங்களின் உரிமைக்காக குரல் கொடுத்த எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களை ஜனநாயகத்திற்கு விரோதமாக, வலுக்கட்டாயமாக சட்டசபையில் இருந்து வெளியேற்றிவிட்டு, கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ஒருவரை (ஓ.பன்னீர்செல்வம்) பேசவிட்டு ரசித்து மகிழ்கிறார் சபாநாயகர் அப்பாவு. சபாநாயகர் என்பதை மறந்து, நாட்டாமையாக மாறி பஞ்சாயத்து செய்வதை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வேடிக்கை பார்ப்பது முற்றிலும் ஜனநாயக விரோத செயலாகும்.

முன்னாள் முதல்-அமைச்சர் என்பதற்காக எதிர்க்கட்சித் தலைவருக்கு அருகே இடம் ஒதுக்கப்பட்டதாக கூறும் அப்பாவு, தன் அதிகாரத்தைப் பயன்படுத்தி முதல்-அமைச்சர் அருகில் அவருக்கு இடம் ஒதுக்குவாரா?

அமைச்சர் போல பேசுவதா?

அ.தி.மு.க. 4 குழுக்களாக உள்ளது, மத்திய அரசு இவர்களை சேர்த்து வைத்தால் என்ன செய்வது? என்று, தான் ஒரு சபாநாயகர் என்பதை மறந்து தி.மு.க. செய்தித் தொடர்பாளர் என்பது போல மனம் போன போக்கில் சட்டமன்றத்தில் பேசியுள்ளது கண்டிக்கத்தக்கதாகும்.

சபாநாயகர் நடுநிலையோடு நடக்க வேண்டும் என்பதை மறந்து, அனைத்து மரபுகளையும் காற்றில் பறக்கவிட்டு, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அவையில் பேசும்போதும், அரசின் திட்டங்களையும், அதன் குறைகளையும் எடுத்துரைக்கும்போதும், சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் பதில் அளிப்பதற்கு முன்பாக, தானே சம்பந்தப்பட்ட துறை அமைச்சர் போல் பதில் அளிக்கிறார்.

அமைச்சராகும் கனவோ?

இதனால், எம்.எல்.ஏ.க்களின் கேள்விக்கு, சம்பந்தப்பட்ட அமைச்சர்களிடம் இருந்து முழுமையான பதிலும், விளக்கமும் கிடைப்பதில்லை. தான் இப்படி நடந்துகொண்டால், முதல்-அமைச்சர் தன்னை அமைச்சர் ஆக்குவார் என்று சபாநாயகர் கனவு காண்கிறார் போலும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com