

சென்னை,
நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் நாளை கூடுகிறது. இதில், தொகுதி மறுவரையறை மசோதா மீண்டும் தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த தி.மு.க., தற்போது ஆதரவு தெரிவித்து உள்ளது. இது இந்தியா கூட்டணியினரிடையே சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு காங்கிரஸ் கட்சி தன்னுடைய அதிருப்தியை தெரிவித்தது.
இதனையடுத்து தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலினை சந்தித்து பேசுவதற்காக காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, முன்னாள் தலைவர் சோனியா காந்தி, மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் சென்னைக்கு விரைந்துள்ளனர். இந்த சந்திப்பில், தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு தி.மு.க. அளித்த ஆதரவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என வலியுறுத்த உள்ளனர்.
இந்த நிலையில், சென்னைக்கு வரும் காங்கிரஸ் கட்சியினரை பாஜக விமர்சித்துள்ளது. இதுகுறித்து பாஜக தேசிய துணைத் தலைவர் ராம் மாதவ் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில்,
“வீரபாண்டிய கட்டபொம்மன் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு மாபெரும் சுதந்திரப் போராட்ட வீரர்; எட்டப்பன் என்பவன் ஆங்கிலேயர்களுடன் சதி செய்து, கட்டபொம்மனுக்குத் துரோகம் இழைத்தவன். ராகுல் காந்தி நேற்றைய பேட்டியில், தி.மு.கவினரை ‘எட்டப்பன்கள்’ என்று அழைத்திருந்தார்.
இப்போது, தி.மு.கவுக்குத் துரோகம் இழைத்ததற்காக, அதே ‘எட்டப்பன்’ என்ற பட்டத்தைக் கொண்டு மு.க.ஸ்டாலின் ராகுலுக்குப் பதிலடி கொடுத்துள்ளார். ‘சகோதரரே’, இப்போது பிச்சை பாத்திரத்துடன் சென்னைக்கு வரவேண்டாம் என்று அவர் கண்ணியமாகவே அறிவுறுத்தியுள்ளார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.