

புதுடெல்லி,
தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழக மக்களின் நலனுக்கான பல்வேறு கோரிக்கைகளை மத்திய அரசிடம் எடுத்து வைக்கும் வாய்ப்பாக இந்தச் சந்திப்பை உருவாக்கி, தமிழக முதல்-அமைச்சர் நேற்றும் இன்றும் பிரதமர் உள்ளிட்ட பல்வேறு மத்தியை அமைச்சர்களை சந்தித்து வருகிறார். இன்று காலை நிதியமைச்சரை முதல்வர் சந்தித்தார். மாலை தொழில் வர்த்தகத்துறை அமைச்சரை சந்திக்கிறார்.
டெல்லியில் உள்ள மருத்துவமனைகள் மற்றும் அரசுப் பள்ளிகளை டெல்லி முதல்வருடன் சென்று தமிழக முதல்வர் பார்வையிட்டு வருகிறார். முதல்-அமைச்சர் அளித்திருக்கின்ற மனுக்கள் ஒட்டுமொத்த தமிழக மக்களின் நலனுக்கான கோரிக்கைகள். தமிழகத்தின் நலனுக்காக நிறைவேற்றப்பட வேண்டிய திட்டங்கள், எதிர்காலத்தில் எடுத்துச் செல்ல வேண்டிய முன்னெடுப்புகள் என, ஒட்டுமொத்தமாக, தமிழகத்தின் நலனை மட்டுமே கருத்தில் கொண்டு பிரதமரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் முதல்-அமைச்சர் ஸ்டாலினுக்கு கிடைத்த வரவேற்பு எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமிக்கு பொறாமையை ஏற்படுத்தியுள்ளது.
எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி டெல்லி வந்து பிரதமர் காலில் நெடுஞ்சான்கிடையாக விழுந்து கிடந்தார். முதல்-அமைச்சர் ஸ்டாலின் யார் காலிலாவது விழுந்தாரா?
தன்னைக் காப்பாற்றிக் கொள்வதற்காக எடப்பாடி பழனிசாமி டெல்லிக்கு காவடி எடுத்துக் கொண்டு வந்தாரே அதுபோல நாங்கள் வந்திருக்கிறோமா, முதல்-அமைச்சர் கம்பீரமாக அமர்ந்து பிரதமரிடம் தமிழகத்தின் கோரிக்கையை எடுத்துக் கூறியிருக்கிறார். உங்களைப் போல காப்பாற்றிக் கொள்ள யார் காலிலும் விழவேண்டிய அவசியம் இல்லை என்று கூறினார்.