பகல் 12 மணி முதல் மாலை 4 மணி வரை வெளியில் செல்ல வேண்டாம்: சென்னை உள்பட 21 மாவட்டங்களில் 4 நாட்களுக்கு அனல் காற்று

தமிழகத்தில் சென்னை உள்பட 21 மாவட்டங்களில் சில இடங்களில் இன்று (வியாழக்கிழமை) முதல் 4 நாட்களுக்கு அனல் காற்று வீசக்கூடும் என்றும், அந்த நாட்களில் பிற்பகல் 12 மணி முதல் மாலை 4 மணி வரை வெளியில் செல்ல வேண்டாம் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தி உள்ளது.
பகல் 12 மணி முதல் மாலை 4 மணி வரை வெளியில் செல்ல வேண்டாம்: சென்னை உள்பட 21 மாவட்டங்களில் 4 நாட்களுக்கு அனல் காற்று
Published on

சென்னை,

தமிழகத்தில் பருவமழை நிறைவுபெற்ற நிலையில், கடந்த மாதம் தொடக்கத்தில் இருந்து வெயிலின் தாக்கம் இருந்து வருகிறது. அந்த வகையில் கடந்த சில நாட்களாக வெயிலின் கோரத்தாண்டவம் அதிகரித்து வருகிறது.

அதன்படி, நேற்று தமிழகத்தில் 10 இடங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டி பதிவாகி இருந்தது. அதன் தொடர்ச்சியாக வருகிற 4-ந்தேதி வரை தமிழகத்தில் சில மாவட்டங்களில் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து காணப்படும் என்றும், சில இடங்களில் அனல் காற்றும் வீசக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தி இருக்கிறது.

அனல் காற்று வீசக்கூடும்

இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் என்.புவியரசன் கூறியதாவது:-

தரைக்காற்று வடமேற்கு திசையில் இருந்து தமிழக பகுதியை நோக்கி வீசுவதால், சென்னை, காஞ்சீபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவள்ளூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், சேலம், தர்மபுரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி, நாமக்கல், கரூர், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், மயிலாடுதுறை ஆகிய 21 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையானது இயல்பைவிட 3 டிகிரியில் இருந்து 5 டிகிரி வரை உயரக்கூடும். இதன் காரணமாக ஒருசில இடங்களில் அனல்காற்று வீசக்கூடும்.

வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும்

பொதுமக்கள், விவசாயிகள், தேர்தல் வேட்பாளர்கள், வாக்காளர்கள் மற்றும் போக்குவரத்து போலீசார் பிற்பகல் 12 மணி மாலை 4 மணி வரை திறந்தவெளியில் வேலை செய்வது மற்றும் ஊர்வலம், வெளியில் செல்வதை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலையானது இயல்பைவிட 2 டிகிரியில் இருந்து 3 டிகிரி வரை உயரக்கூடும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com