

சென்னை,
காசோலை மோசடி வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் விடுதலை செய்யப்படும்போது, அதை எதிர்த்து செசன்சு கோர்ட்டில் மேல்முறையீடு செய்வதா? அல்லது ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்வதா? என்பது குறித்து சுப்ரீம் கோர்ட்டும், ஐகோர்ட்டும் வெவ்வேறு உத்தரவுகளை பிறப்பித்துள்ளன.
இந்த மேல்முறையீட்டு வழக்கை எந்த கோர்ட்டு விசாரிப்பது? என்பது குறித்து முடிவெடுக்க சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், வி.பாரதிதாசன், என்.ஆனந்த் வெங்கடேஷ் ஆகியோர் கொண்ட முழு பெஞ்ச் நேற்று விசாரித்தது.
பின்னர் நீதிபதிகள் பிறப்பித்த இடைக்கால உத்தரவில், காசோலை மோசடி தொடர்பான மேல்முறையீட்டு வழக்குகளை விசாரிக்கும் அதிகாரம் யாருக்கு உள்ளது என்பது குறித்து சுப்ரீம் கோர்ட்டும், ஐகோர்ட்டும் மாறுபட்ட உத்தரவுகளை பிறப்பித்துள்ளன. எனவே, நாங்கள் மறுஉத்தரவு பிறப்பிக்கும் வரை இதுதொடர்பான மேல்முறையீட்டு வழக்குகளை மாவட்ட செசன்சு கோர்ட்டுகள் விசாரணைக்கு ஏற்கக்கூடாது. ஏற்கனவே தொடரப்பட்ட வழக்கை விசாரித்து வந்தாலும் தீர்ப்பு எதுவும் பிறப்பிக்க வேண்டாம் என்று கூறியுள்ளனர்.
மேலும், இந்த விவகாரத்தில் சென்னை ஐகோர்ட்டு வக்கீல்கள் சங்கம், பெண் வக்கீல்கள் சங்கம் உள்ளிட்ட வக்கீல் சங்கங்கள் தங்களது கருத்தை தெரிவிக்க வேண்டும் என்று கூறி விசாரணையை 25-ந்தேதிக்கு தள்ளிவைத்தனர்.