

சென்னை,
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கொரோனா வைரஸ் தடுப்பு காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் காய்கறிகள், தர்பூசணி, வெள்ளரி, வாழை, பலா, மலர்கள் போன்றவற்றை அறுவடை செய்ய முடியாமலும், சந்தைக்கு கொண்டு செல்ல முடியாமலும் விவசாயிகள் பெரும் நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர். இதுபோன்ற சூழ்நிலையில் நைட்ரஜன், பாஸ்பரஸ், சல்பர் போன்ற உரங்களுக்கான மானியத்தை குறைப்பதற்கு மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்துள்ளது.
இதன்மூலம் விவசாயிகளுக்கான மானியத்தில் சுமார் ரூ.700 கோடியை மத்திய அரசு பறித்து கொண்டுள்ளது. இது, வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போன்றதாகும். எனவே, உர மானியத்தை குறைக்கும் நடவடிக்கையை மத்திய அரசு கைவிட வேண்டும். டெல்லி சுல்தான்புரி பகுதியில் தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் புலம் பெயர்ந்த தொழிலாளர் முகாமில் உணவும், மருந்தும் கிடைக்காமல் கோவையை சேர்ந்த என்ஜினீயர் முஸ்தபா என்பவர் மரணம் அடைந்துள்ளார். இந்த முகாமில் தமிழகத்தை சேர்ந்த 500-க்கும் மேற்பட்டோர் அவதிப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
எனவே, தமிழக அரசு, மத்திய அரசு மற்றும் டெல்லி மாநில அரசுடன் தொடர்பு கொண்டு சுல்தான்புரி முகாமில் உள்ள தமிழக தொழிலாளர்கள் அனைவருக்கும் உணவு, மருந்துகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்கவும், அவர்கள் அனைவரும் அவரவர் சொந்த ஊருக்கு பத்திரமாக வருவதை உறுதி செய்யவும் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.