கோடைகால நோய்களுக்கு பாராசிட்டமால் மாத்திரைகளை எடுத்துக்கொள்ள வேண்டாம் - சுகாதாரத்துறை அறிவுறுத்தல்

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல மாவட்டங்களில் 100 டிகிரிக்கு மேல் வெப்பநிலை பதிவாகி வருகிறது.
கோடைகால  நோய்களுக்கு பாராசிட்டமால் மாத்திரைகளை எடுத்துக்கொள்ள வேண்டாம் - சுகாதாரத்துறை அறிவுறுத்தல்
Published on

சென்னை,

மருத்துவரின் பரிந்துரையின்றி மாத்திரைகளை எடுத்துக்கொள்வது தவறு என்றும், அதிலும் குறிப்பிட்ட சில வகை மாத்திரைகளை நிச்சயம் தவிர்க்க வேண்டும் என்றும் எச்சரித்துள்ளது. அதிலும் குறிப்பாக, பாராசிட்டமால் மாத்திரைகளை எடுத்துக்கொள்ள வேண்டாம் என்ற சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல மாவட்டங்களில் 100 டிகிரிக்கு மேல் வெப்பநிலை பதிவாகி வருகிறது. இதனால் கோடைகால நோய்கள் மற்றும் வைரஸ் தொற்றுகள் பரவும் அபாயம் அதிகரித்துள்ளது. இந்நிலையில், நோயாளிகள், குழந்தைகள் மற்றும் முதியவர்கள் அவசியமின்றி பகல் நேரங்களில் வெளியே செல்ல வேண்டாம் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

இதற்கிடையில், வெப்பவாதம் காரணமாக உடல் வெப்பம் அதிகரிக்கும் போது, மருத்துவரின் ஆலோசனையின்றி சிலர் பல்வேறு மாத்திரைகளை உட்கொள்வது தெரியவந்துள்ளது. இது கடுமையான எதிர்விளைவுகளை ஏற்படுத்தும் அபாயம் உள்ளதாக சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது. இது தொடர்பாக பொது சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:- “வெப்பவாதம் காரணமாக ஒருவர் மயக்கம் அடைந்தாலோ அல்லது உடல் சோர்வாக இருந்தாலோ, அவரை நிழல் மற்றும் காற்றோட்டம் உள்ள இடத்தில் ஒருபக்கமாக படுக்கவைக்க வேண்டும். தொடர்ந்து தண்ணீர், இளநீர் அல்லது மோர் குடிக்கச் செய்து உடல் வெப்பத்தை குறைக்க வேண்டும்.

மேலும், ஈரமான துணியால் உடலைத் துடைத்து குளிர்விக்க வேண்டும். காய்ச்சல் என தவறாக நினைத்து ஆஸ்பிரின் அல்லது பாராசிட்டமால் மாத்திரைகள் கொடுப்பதைத் தவிர்க்க வேண்டும். இவ்வாறு மருந்துகள் கொடுத்தால், தற்காலிகமாக காய்ச்சல் குறைந்தாலும், கடுமையான எதிர்விளைவுகள் ஏற்படும். சில நேரங்களில் உயிருக்கு ஆபத்தும் விளையக்கூடும்,” என தெரிவித்தனர். எனவே, கோடைக்காலத்தில் எந்தவொரு மருந்தையும் மருத்துவரின் பரிந்துரையின்றி எடுத்துக் கொள்ளக்கூடாது என்றும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com