தண்டவாளங்களில் அத்துமீறி நுழையக்கூடாது: ரெயில்வே பாதுகாப்பு படை எச்சரிக்கை

ஆபத்தான செயல்களாலேயே பெரும்பாலான விபத்துகள் நிகழ்கின்றன.
தண்டவாளங்களில் அத்துமீறி நுழையக்கூடாது: ரெயில்வே பாதுகாப்பு படை எச்சரிக்கை
Published on: 

சென்னை,

ரெயில்வே பாதுகாப்புப் படை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

அனுமதியின்றி ரெயில் தண்டவாளங்களை கடப்பது, தண்டவாளங்களுக்கு அருகில் நடந்து செல்லும்போது செல்போன் அல்லது இயர்போன்களை பயன்படுத்துவது மற்றும் ஓடும் ரெயில்களில் ஏறவோ அல்லது இறங்கவோ முயற்சி செய்வது போன்ற ஆபத்தான செயல்களாலேயே பெரும்பாலான விபத்துகள் நிகழ்கின்றன.

எனவே, பொதுமக்கள் நடைமேம்பாலங்கள், சுரங்கப்பாதைகள் மற்றும் சிக்னல் வழிகாட்டுதல்களை முழுமையாகப் பின்பற்றி பாதுகாப்பான முறையில் பயணிக்க வேண்டும். நடப்பாண்டு அக்டோபர் மாதம் வரை ரெயில் மோதிய விபத்துகளில் சிக்கி மொத்தம் 185 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 175 பேர் தண்டவாளங்களில் அத்துமீறி நுழைந்ததன் காரணமாகவே விபத்துகளில் சிக்கியுள்ளனர். மேலும், கடந்த 2024-ம் ஆண்டில் 276 விபத்துகளும், 2025-ம் ஆண்டில் 237 விபத்துகளும் நிகழ்ந்துள்ளன.

அனுமதியின்றி ரெயில்வே வளாகத்தில் நுழைவது, 1989-ம் ஆண்டு ரெயில்வே சட்டத்தின் 147-வது பிரிவின் கீழ் தண்டனைக்குரிய குற்றமாகும். இச்சட்டத்தின்படி, இதற்கு 6 மாதங்கள் வரை சிறைத்தண்டனை, ரூ.1,000 வரை அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும். அவசர காலங்களில் அல்லது மருத்துவ உதவிகள் தேவைப்படும் வேளையில் பொதுமக்கள் 139 என்ற ரெயில்வே உதவி எண்ணைத் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X