சாதி, மத மோதலை தூண்டும் புகைப்படங்கள்... தூத்துக்குடி, நெல்லை எஸ்.பி.க்கள் எச்சரிக்கை

சாதி, மத ரீதியான மோதலை தூண்டும் வகையில் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிடக்கூடாது என தூத்துக்குடி, நெல்லை மாவட்ட எஸ்.பி.க்கள் எச்சரித்துள்ளனர்.
சாதி, மத மோதலை தூண்டும் புகைப்படங்கள்... தூத்துக்குடி, நெல்லை எஸ்.பி. எச்சரிக்கை
Published on

நெல்லை/தூத்துக்குடி:

தூத்துக்குடி மாவட்டத்தில் சாதி, மத ரீதியாக மோதல்களை தூண்டும் வகையிலோ, தலைவர்களின் புகைப்படங்களை தவறாக சித்தரித்தோ, ஆயுதங்களுடன் புகைப்படம் அல்லது பாடல்களை ஒலிக்கச் செய்து இரு பிரிவினருக்கிடையே மோதலையோ, பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையிலோ சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்பவர்கள் மாவட்ட காவல் துறையின் மூலம் கண்காணிக்கப்பட்டு வந்தனர். அதன்படி கடந்த 6 மாதங்களில் மட்டும் சமூக வலைத்தளங்களில் இதுபோன்று பதிவிட்டதாக 23 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மாவட்ட எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் உத்தரவின்படி தூத்துக்குடி மாவட்டத்தில் அனைத்து காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளிலும் காவல் துறையினர் பள்ளி, கல்லூரிகள், நிறுவனங்கள் மற்றும் பொது இடங்களில் மாணவ மாணவிகள் மற்றும் பொதுமக்களுக்கு சாதி பிரச்சினைகள், பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு, போக்சோ சட்டங்கள், பாலியல் குற்றங்கள், சாதி, மத ரீதியான மோதல்களை ஏற்படுத்தும் வகையில் புகைப்படங்கள் அல்லது செய்திகளை சமூக வலைதளங்களில் பதிவிடுவதால் ஏற்படும் விளைவுகள் மற்றும் போதைப் பொருள் தடுப்பு போன்றவை குறித்தும் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

எனவே தூத்துக்குடி மாவட்டத்தில் சாதி, மத ரீதியான மோதலை ஏற்படுத்தும் வகையிலோ, பிற சாதியினரை புண்படுத்தும் வகையிலோ, பொதுமக்களை அச்சுறுத்தும் வகையிலோ, பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையிலோ சமூக வலைதளங்களில் எதையும் பதிவேற்றம் செய்ய வேண்டாம் எனவும் மீறினால் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மாவட்ட எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் எச்சரித்துள்ளார்.

இதேபோல் நெல்லை மாவட்டத்திலும் பொது அமைதியை சீர்குலைக்கும் வகையில் சமூக வலைதளங்களில் தகவல்களை பதிவு செய்து பரப்புபவர்கள் மீது வழக்கு பதிவு செய்து கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நெல்லை மாவட்டம், சீவலப்பேரி, அலங்காரப்பேரி, பெருமாள் கோவில் தெருவை சேர்ந்த மாரிசங்கர்(வயது 19) என்பவர் இரு தரப்பினருக்கு இடையே பிரச்சினையைத் தூண்டும் வகையில் அரிவாளுடன் இருக்கக்கூடிய புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பரப்பியதாக நேற்று கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com