தமிழ்நாடு என்ற பெயரை மாற்றச் சொல்வதா? 'கவர்னர் தனது பெயரை மாற்றிக்கொள்வாரா?' கமல்ஹாசன் கேள்வி

தமிழ்நாடு என்ற பெயரை மாற்றச் சொல்வதா என்றும், கவர்னர் தனது பெயரை ரவி என்பதற்கு பதிலாக புவி என மாற்றிக்கொள்வாரா எனவும் கமல்ஹாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழ்நாடு என்ற பெயரை மாற்றச் சொல்வதா? 'கவர்னர் தனது பெயரை மாற்றிக்கொள்வாரா?' கமல்ஹாசன் கேள்வி
Published on

சென்னை,

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தேச ஒற்றுமை யாத்திரை மேற்கொண்டுவருகிறார். இதன் ஒரு பகுதியாக டெல்லியில் நடந்த யாத்திரையில் ராகுல் காந்தியுடன் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் பங்கேற்றார். கமல்ஹாசனின் அழைப்பை ஏற்று அவரது கட்சி நிர்வாகிகளும் அந்த யாத்திரையில் கலந்துகொண்டனர்.

அவ்வாறு கலந்துகொண்ட கட்சி நிர்வாகிகளுக்கு சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள முத்தமிழ் பேரவையில் கமல்ஹாசன் நேற்று விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தார். அதில் கட்சி நிர்வாகிகளும், பிரமுகர்களும் கலந்துகொண்டனர்.

மதத்தை வைத்து அரசியல்

முன்னதாக கட்சி நிர்வாகிகள் மத்தியில் கமல்ஹாசன் பேசியதாவது:-

பா.ஜ.க. மதத்தை வைத்து அரசியல் செய்கிறது. மத அரசியலை எதிர்ப்பதற்காகவே காங்கிரஸ் சார்பில் நடைபெற்ற தேச ஒற்றுமை யாத்திரையில் பங்கேற்றோம். மதத்துக்கு எதிரான அரசியலை தடுக்கவேண்டும்.

தேசத்தின் ஒற்றுமையை நிலைநாட்டும் வகையில் தேச ஒற்றுமை யாத்திரை அமைந்துள்ளது. அனைவரும் ஒற்றுமை யாக இருக்கவேண்டும். நான் 'ஏ' சொன்னால் 'ஏ' சொல்லுங்கள். 'பி' சொன்னால் 'பி' சொல்லுங்கள். 'சி' சொன்னால் 'சி' சொல்லுங்கள்.

உங்கள் ஆதரவுடன் மட்டுமே தலைமைப்பொறுப்பில் இருக்கிறேன். எனவே, கட்சியின் தலைமை பிறப்பிக்கும் கட்டளைகள், உத்தரவுகளை மீறுபவர்கள் மீது பாராமுகத்தோடு இருக்கமாட்டேன்.

மெரினாவில் ஜல்லிக்கட்டு

சென்னையில் மக்கள் நீதி மய்யம் சார்பில் ஜல்லிக்கட்டு நடத்த திட்டமிட்டுள்ளோம். விரைவில் அதற்கான இடம் அறிவிக்கப்படும். மெரினாவில் நடத்தவேண்டும் என்பது என்னுடைய விருப்பம். நீங்கள் (கட்சியினர்) செய்யும் நல்லது, கெட்டது என அனைத்தையும் நான் பார்த்துக்கொண்டிருக்கிறேன். உங்களிடம் பஞ்சாயத்து செய்ய என்னிடம் நேரமில்லை.

எந்தக் கட்சியாக இருந்தாலும், மதத்தை வைத்து தமிழகத்தில் அரசியல் செய்யமுடியாது. ஏனென்றால் இது தமிழ்நாடு. அண்ணா என்பது வெறும் பெயர் மட்டும் இல்லை. அது ஒரு உறவு. நம்முடைய நலன் சார்ந்து யார் பேசுகிறார்களோ, அவர்கள் பின்னால்தான் மக்கள் செல்வார்கள். அந்த நலன்களைத்தான் நான் தேடிக்கொண்டிருக்கிறேன்.

பெயரை மாற்ற சொல்வதா?

கட்சியை அடுத்த கட்டத்தை நோக்கி நகர்த்துகிறோம். இந்தியா சிதைந்துவிடக்கூடாது என்பதற்காகவே தேச ஒற்றுமை யாத்திரை நடைபெறுகிறது.

நீண்ட, நெடிய, பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகே தமிழ்நாடு என்ற பெயர் நமக்கு கிடைத்திருக்கிறது. இதை மாற்றச் சொல்வதற்கு அவர் (கவர்னர்) யார்? அவருடைய பெயரை ரவி என்பதற்கு பதிலாக புவி என மாற்றச்சொன்னால் மாற்றிக்கொள்வாரா?

மதத்தை அரசியலின் கருவியாக பயன்படுத்துவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. அவர்களுடைய அரசியல் என்பது மதத்துக்கானது. மக்கள் நீதி மய்யத்தின் அரசியல் மக்களுக்கானது.

இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com