

சென்னை வியாசர்பாடி பன்னீர்செல்வம் 1-வது தெருவைச் சேர்ந்தவர் ஜாக் கார்னர் லெஸ் (வயது 27). உக்ரைன் நாட்டில் மருத்துவ படிப்பை முடித்து விட்டு, தற்போது ராயபுரம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் டாக்டராக பணியாற்றி வந்தார்.
கடந்த 2 நாட்களாக ஜாக் கார்னர் லெஸ் மன அழுத்தத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், முன்தினம் இரவு தனது அறைக்குள் சென்ற அவர் நீண்ட நேரமாக வெளியில் வரவில்லை.
சந்தேகமடைந்த தந்தை ஜான், கதவை தட்டியும் திறக்காததால் கதவை உடைத்து உள்ளே சென்றார். அப்போது, மின்விசிறியில் தூக்கிட்டு தொங்கிய நிலையில் மகன் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்த தகவலின் பேரில் செம்பியம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோ தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று அவரது உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து டாக்டர் தற்கொலைக்கான காரணம் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.