

சென்னை,
சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் 6-ம் வகுப்பு முதல் 3-வது மொழி கட்டாயம் என்ற மத்திய அரசின் அறிவிப்புக்கு தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்திருந்தார். இதற்கு பதிலளிக்கும் வகையில் மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவில், “இந்தி திணிப்பு என்பது அரசியல் தோல்விகளை மறைப்பதற்கான முயற்சி. பல மொழிகளை கற்பதால் தமிழ் பலவீனமாகிவிடாது. வாக்கு வங்கிக்காக தமிழ் மாணவர்களின் வாய்ப்புகளை தி.மு.க. அரசு தடுக்க நினைக்கிறது” என்று விமர்சித்திருந்தார்.
இந்த நிலையில், தர்மேந்திர பிரதானின் விமர்சனத்திற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலளித்துள்ளார். இது தொடர்பாக ‘எக்ஸ்’ தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறப்பட்டுள்ளதாவது;-
“மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான் அவர்களே, உங்கள் கருத்துகள் மிகவும் பொறுப்பற்றவை மற்றும் அசட்டுத்தனமானவை. மேலும், அவை இந்தியாவின் பன்மைத்துவம், கூட்டாட்சி விழுமியங்கள் மற்றும் மாநிலங்களுக்கான மரியாதை ஆகியவற்றின் மீதான அலட்சியமான பார்வையை பிரதிபலிக்கின்றன.
தமிழ்நாடு மும்மொழிக் கொள்கையை உறுதியாக நிராகரிக்கிறது. இது மொழிகளை எதிர்ப்பது பற்றியது அல்ல, மாறாக திணிப்பை எதிர்ப்பது மற்றும் அரசியலமைப்பு உரிமைகளைப் பாதுகாப்பது பற்றியது. நாடாளுமன்றத்தில் தமிழர்களைப் பற்றி நீங்கள் முன்பு தெரிவித்த இழிவான கருத்துகளும், அதைத் தொடர்ந்து தாமதமாக நீங்கள் தெரிவித்த மன்னிப்பும், ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு நடத்தை என்பது அனைவருக்கும் தெரியும்.
“இந்தி திணிக்கப்படவில்லை" என்பது நேர்மையற்ற கூற்றாகும். தமிழ்நாட்டைப் போன்ற இந்தி பேசாத மாநிலங்களை, உண்மையான தேர்வு ஏதுமின்றி மூன்றாவது மொழியை ஏற்றுக்கொள்ளும்படி கட்டமைப்பு ரீதியாக வற்புறுத்தும்போது, அதில் விருப்பம் என்ற பேச்சுக்கு இடமில்லாமல் போய்விடுகிறது.
இந்தி திணிப்பை ஏற்க மறுத்ததற்காகத் தமிழ்நாட்டை தண்டிக்கும் விதமாக, 'சமக்ர சிக்ஷா' திட்டத்தின் கீழ் ரூ.2,200 கோடி என்ற மாபெரும் தொகையைச் சட்டவிரோதமாக நிறுத்தி வைப்பது திமிர் பிடித்த செயல் என்பதைத் தவிர வேறில்லை. இவை விருப்ப மானியங்கள் அல்ல; மாறாக, வரிகள் மூலம் வசூலிக்கப்பட்ட, சட்டப்படி தமிழ்நாட்டு மக்களுக்குச் சொந்தமான நிதியாகும். இதை ஒரு வற்புறுத்தல் கருவியாகப் பயன்படுத்த முடியாது.
நான் மற்றொன்றையும் தெளிவுபடுத்த விரும்புகிறேன். நெகிழ்வுத்தன்மை என்ற போர்வையிலோ, நிதி அழுத்தம் காரணமாகவோ, அல்லது தேசிய நலன் என்ற பெயரிலோ, எந்த சூழ்நிலையிலும் மொழித் திணிப்பை தமிழ்நாடு ஏற்றுக்கொள்ளாது. மும்மொழிக் கொள்கை மாணவர்கள் மீது தேவையற்ற சுமையை சுமத்துகிறது, மாநிலங்களின் உரிமைகளை மீறுகிறது, மேலும் இந்தியாவின் மொழிப் பன்மையை "ஒரே இந்தியா" கட்டமைப்பிற்குள் நீர்த்துப்போகச் செய்ய முயற்சிக்கிறது.
இந்த வார்த்தை ஜாலங்களுக்கு மத்தியில், நீங்கள் அடிப்படைக் கேள்விகளைத் தவிர்க்கக் கூடாது. உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் குஜராத் முழுவதும் உள்ள பள்ளிகளில் உண்மையில் எந்த மூன்றாவது இந்திய மொழி நடைமுறைப்படுத்தப்படுகிறது? தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு போன்ற தென்னிந்திய மொழிகளையும், வட இந்தியாவில் பெங்காலி, ஒடியா, மராத்தி போன்ற மொழிகளையும் எத்தனை பி.எம். ஸ்ரீ பள்ளிகள் உண்மையாகவே வழங்குகின்றன?
எத்தனை கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் உண்மையில் தமிழை கற்பிக்கின்றன? கடந்த 10 ஆண்டுகளில் எத்தனை தமிழ் மற்றும் பிற தென்னிந்திய மொழி ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்? மேலும், சமஸ்கிருதத்துடன் ஒப்பிடுகையில், தமிழ், கன்னடம், மலையாளம், ஒடியா போன்ற செம்மொழிகளை மேம்படுத்துவதற்காக என்.டி.ஏ. அரசு எவ்வளவு செலவு செய்துள்ளது? என்பதை பதிவு செய்யுமாறு நான் உங்களுக்கு சவால் விடுகிறேன்.
இதே போல், தமிழ்நாட்டில் பள்ளி உள்கட்டமைப்பு இல்லை என்ற உங்கள் கருத்தும் ஆதாரமற்றது. பல ஆண்டுகால முதலீடு, அதிக மாணவர் சேர்க்கை, வலுவான கற்றல் விளைவுகள் மற்றும் முன்னோடி நலத்திட்டங்கள் ஆகியவற்றின் மூலம் இந்தியாவின் மிக வலிமையான பொதுக் கல்வி அமைப்புகளில் ஒன்றை நாங்கள் உருவாக்கியுள்ளோம்.
இந்தி திணிப்பிற்கு எதிரான எங்கள் எதிர்ப்பு அச்சத்தால் பிறந்ததல்ல. எங்கள் தாய் தமிழ் ஒருபோதும் பலவீனமடையாது. தமிழும், தமிழர்களும் ஒவ்வொரு விதமான திணிப்பு அல்லது கலாச்சார ஊடுருவலையும் தாங்கி நிற்கிறார்கள், தொடர்ந்து எதிர்த்து நிற்பார்கள். இது கொள்கை, கண்ணியம் மற்றும் இந்தியாவின் உண்மையான பன்முகத்தன்மையை பாதுகாப்பது தொடர்பான விஷயம்.
தமிழ்நாட்டு மக்களின் வாக்குகளைக் கோரும் அதே வேளையில், ஒவ்வொரு இந்தியக் குழந்தையும் கட்டாயமாக மூன்று மொழிகளைக் கற்க வேண்டும் என்ற இந்தப் பிரகடனத்தை தமிழ்நாட்டு மண்ணில் வெளியிடுமாறு நான் உங்களுக்குச் சவால் விடுகிறேன்.
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது தேசிய ஜனநாயக கூட்டணிக் கட்சிகள் தங்கள் நிலைப்பாட்டை தெளிவாகக் கூற வேண்டும். பா.ஜ.க.வால் தீவிரமாக முன்னெடுக்கப்படும் இந்த மும்மொழிக் கொள்கையை அவர்கள் ஆதரிக்கிறார்களா?
எடப்பாடி பழனிசாமி தமிழ்நாட்டு மக்களுடன் நிற்கிறாரா? அல்லது கொள்கை என்ற போர்வையில் இந்தியை திணிக்க முயலும் தனது டெல்லி மேலதிகாரிகளுடன் நிற்கிறாரா? என்பது குறித்த தனது நிலைப்பாட்டை சந்தேகத்திற்கு இடமின்றி தெளிவுபடுத்த வேண்டிய நேரம் இது.”
இவ்வாறு மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.