கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் போராட்டத்திற்கு ஆதரவா? - அமைச்சர் நிர்மல் குமார் பதில்

ஒரு தனி அமைப்போ, அல்லது இயக்கமோ செய்யும் போராட்டத்திற்கு அரசு ஆதரவு கொடுக்க முடியாது என அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார்.
கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் போராட்டத்திற்கு ஆதரவா? - அமைச்சர் நிர்மல் குமார் பதில்
Published on: 

சென்னை,

இந்திய தலைமை தேர்தல் ஆணையாளர் ஞானேஷ் குமார், மற்ற இரு ஆணையாளர்களின் ஆலோசனைகளை கவனத்தில் கொள்ளாமல் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப்பணியில் தன்னிச்சையாக செயல்பட்டதாக புகார்கள் எழுந்தன. இதனையடுத்து ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் எனக்கோரி, பல்வேறு அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஜந்தர் மந்தர்

இந்த நிலையில், டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் இன்று போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள். எனினும், போலீசார் இதற்கு அனுமதி மறுத்துள்ளனர். வன்முறை எதுவும் பரவாமல் தடுப்பதற்காக பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

சென்னையில் போராட்டம்

டெல்லி போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், சென்னையின் பெசன்ட் நகர் பகுதியில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சி சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது. இதற்கு போலீசாரின் முன் அனுமதி பெறப்படவில்லை என்று கூறப்படுகிறது. அவர்களை கலைந்து செல்லும்படி போலீசார் அறிவுறுத்தினர். அவர்களுடன் பேச்சுவார்த்தையும் நடத்தினர்.

எனினும், அதில் சமரசம் ஏற்படவில்லை. கலைந்து செல்ல மறுத்த அவர்கள் தொடர்ந்து கோஷம் எழுப்பி, போராட்டத்தில் ஈடுபட்டனர். சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்திலும் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து அவர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களை குண்டுக்கட்டாக தூக்கிச்சென்று போலீஸ் வாகனத்தில் ஏற்றினர். தொடர்ந்து கூடுதல் போலீசாரும் குவிக்கப்பட்டு உள்ளனர்.

அமைச்சர் நிர்மல் குமார் பதில்

இந்நிலையில், கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் போராட்டத்தை த.வெ.க. அரசு ஆதரிக்கிறதா? அல்லது எதிர்க்கிறதா? என அமைச்சர் நிர்மல் குமாரிடம் செய்தியாளர்கள் இன்று கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்தபோது அவர் கூறியதாவது;-

“எஸ்.ஐ.ஆர். விவகாரத்தில் த.வெ.க. அரசின் நிலைப்பாடு குறித்து தெளிவாக சொல்லி இருக்கிறோம். எஸ்.ஐ.ஆர். பணிகளை எதிர்த்து தமிழகம் முழுவதும் போராடிய ஒரே கட்சி தமிழக வெற்றிக் கழகம்தான். எஸ்.ஐ.ஆர். விவகாரம் குறித்து கேட்டால் கருத்து சொல்ல முடியும். ஆனால் ஒரு தனி அமைப்போ, அல்லது இயக்கமோ செய்யும் போராட்டத்திற்கு அரசு ஆதரவு கொடுக்க முடியாது.

எல்லா இயக்கமும் எதை நோக்கி பயணிக்கிறார்கள் என்பது நமக்கு தெரியாது. இயக்கத்தின் பின்னால் இருந்து யாரும் இயக்குகிறார்களா? என்பது பற்றியும் நமக்கு தெரியாது. கடந்த முறை கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் டெல்லியில் நீட் தேர்வை முறையாக நடத்த வேண்டும் என்று போராட்டம் நடத்தினர். ஆனால் நாங்கள் நீட் தேர்வே வேண்டாம் என்று சொல்கிறோம். இரண்டுக்கும் வித்தியாசம் இருக்கிறது.

அவர்களுடைய கோரிக்கை பட்டியலில் பத்து விஷயங்கள் இருந்தால், அதில் ஏதேனும் ஒன்றுக்கு மட்டும்தான் நமக்கு உடன்பாடு இருக்கும். எனவே அவர்களின் அனைத்து போராட்டங்களுக்கும் நாம் ஆதரவு கொடுக்க முடியாது. கட்சி சார்பில் எங்கள் நிலைப்பாட்டை மட்டுமே நாங்கள் தெரிவிக்க முடியும்.

எஸ்.ஐ.ஆர். பணிகளில் கண்டிப்பாக தவறு நடந்திருக்கிறது. தலைமை தேர்தல் ஆணையர் நிச்சயமாக ராஜினாமா செய்ய வேண்டும். அதில் எந்த மாற்றுக் கருத்தும் கிடையாது. ஆனால் நடந்த தவறை சரிசெய்வதற்கு என்ன செய்ய வேண்டுமே அதைச் செய்ய வேண்டும். இந்த எஸ்.ஐ.ஆர். மட்டும் நடக்காமல் இருந்திருந்தால் இந்நேரம் த.வெ.க. 170 தொகுதிகளில் கண்டிப்பாக வெற்றி பெற்றிருக்கும்.”

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com