அரசு பள்ளியில் படித்து உயர்கல்வியை தொடரும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 உதவித்தொகை பயனுள்ளதாக இருக்கிறதா? என்பது பற்றி மாணவிகள், பேராசிரியர் தங்கள் கருத்துகளை பதிவு செய்திருக்கின்றனர்.
மாதம் ரூ.1,000 உதவித்தொகை
பெண் கல்வியை ஊக்கப்படுத்தும் வகையில் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வரிசையில் தற்போது முத்திரை பதித்து இருக்கக்கூடிய திட்டம்தான், புதுமைப்பெண் திட்டம்.
ஏற்கனவே பெண்களுக்காக நடைமுறையில் இருந்த மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதியுதவி திட்டத்தை, மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித்திட்டமாக அரசு மாற்றம் செய்து உத்தரவிட்டது. அந்த திட்டத்தின்படி, 6 முதல் 12-ம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் படித்து உயர்கல்வியில் பட்டப்படிப்பு, டிப்ளமோ, தொழிற்படிப்புகளில் இடைநிற்றல் இல்லாமல் படிப்பை தொடர வேண்டும் என்ற நோக்கில் மாணவிகளுக்கு ரூ.1,000 மாதந்தோறும் உதவித்தொகையாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
நடப்பாண்டிலேயே இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக ரூ.698 கோடியை தமிழக அரசு ஒதுக்கி, அரசாணையையும் வெளியிட்டது.
புதுமைப்பெண் திட்டம்
இந்த திட்டத்தில் பயன்பெற அரசு பள்ளிகளில் படித்து தற்போது கல்லூரிகளில் 2, 3, 4-ம் ஆண்டுகளில் படிப்பை தொடரும் மாணவிகள் விண்ணப்பிக்க முதலில் அறிவுறுத்தப்பட்டது. அதன்படி, மாணவிகள் விண்ணப்பித்தனர். விண்ணப்பித்த மாணவிகளிடம் 6 முதல் 12-ம் வகுப்பு வரையில் அரசு பள்ளிகளில் படித்ததற்கான சான்று, 10 மற்றும் 12-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், ஆதார், கல்லூரி அடையாள அட்டை, வங்கி கணக்கு எண் ஆகியவை கேட்டு பெறப்பட்டது.
அவ்வாறு விண்ணப்பித்த 2, 3 மற்றும் 4-ம் ஆண்டுகளில் படித்து வரும் 1 லட்சத்து 13 ஆயிரம் மாணவிகளுக்கு உதவித்தொகை வழங்குவதற்கான திட்டத்தை கடந்த செப்டம்பர் மாதம் 5-ந்தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் தொடங்கி வைத்தார். இதில் டெல்லி முதல்-மந்திரியும், ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். அந்த நிகழ்ச்சியில்தான் இதற்கு புதுமைப்பெண் திட்டம் என்று பெயர் சூட்டப்பட்டது.
3-வது தவணையாக...
விண்ணப்பித்து தகுதியான மாணவிகளுக்கு ஒவ்வொரு மாதமும் 7-ந்தேதி அவரவர் வங்கி கணக்கில் ரூ.1,000 உதவித்தொகை சென்றடையும் வகையில், அனைத்து செயல்பாடுகளும் வெளிப்படைத்தன்மையுடன் இணைய வழியில் நடக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டு நடைமுறையில் இருந்து வருகிறது.
அதன்படி, திட்டம் தொடங்கி வைக்கப்பட்டதில் இருந்து தற்போது 3-வது தவணையாக ரூ.1,000 உதவித்தொகை வங்கி கணக்கில் செலுத்தப்பட்டு இருக்கிறது. தற்போது முதலாம் ஆண்டு கல்லூரிகளில் சேர்ந்து இருக்கும் மாணவிகளும், ஏற்கனவே 2, 3 மற்றும் 4-ம் ஆண்டுகளில் படித்து வந்து இந்த திட்டத்தில் சேராதவர்களும் வருகிற 19-ந்தேதிக்குள் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அரசின் இந்த புதுமைப்பெண் திட்டம் மாணவிகளுக்கு சரியாக கிடைக்கிறதா? அந்த தொகை எந்த அளவுக்கு அவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கிறது? என்பது குறித்து திட்டத்தில் பயன்பெற்ற மாணவிகளிடம் கருத்துகள் கேட்கப்பட்டன. அதன் விவரம் வருமாறு:-
பயனுள்ள திட்டம்
கோவில்பட்டி அரசு கல்லூரியில் படித்து வரும் மாணவி காவேரி:- நான் எங்கள் வீட்டின் முதல் பட்டதாரி. எனது தந்தை சுஜித், லோடு ஆட்டோ டிரைவராக உள்ளார். எனக்கு ஒரு தங்கை, 2 தம்பிகள் உள்ளனர். எங்களை படிக்க வைக்க எனது தந்தை மிகவும் சிரமப்பட்டு வருகிறார். இதனால் எனது தங்கை படிக்க முடியவில்லை. தம்பிகள் படித்து வருகின்றனர். சங்கரன்கோவிலில் இருந்து தினமும் பஸ்சில் கல்லூரிக்கு வருகிறேன். இதற்கு தினமும் ரூ.66 செலவாகும். இதனால் கஷ்டப்பட்டு வந்த நிலையில், தமிழக அரசின் புதுமைப்பெண் திட்டம் வந்தது. கடந்த செப்டம்பர் மாதம் முதல் எனது வங்கி கணக்கில் மாதம் தோறும் ரூ.1000 வந்து விடுகிறது. இதனை நான் கல்லூரிக்கு செல்ல பயணத்துக்கும், புத்தகம் உள்ளிட்டவை வாங்குவதற்கும் பயன்படுத்திக் கொள்கிறேன். இந்த திட்டம் மிகவும் பயன் உள்ளதாக இருக்கிறது.
கனவு நனவாகிறது
தூத்துக்குடியை சேர்ந்த கல்லூரி மாணவி இசக்கி புஷ்பா:-தமிழக அரசு 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை அரசு பள்ளிக்கூடங்களில் படிக்கும் மாணவிகளுக்கு உயர்கல்விக்காக மாதம் தோறும் ரூ.1000 வழங்குகிறது. இந்த திட்டம் மிகவும் பயனுள்ள திட்டம். பொதுவாக மாணவிகளுக்கு பிளஸ்-2 முடித்த உடன் உயர்கல்விக்கு செல்ல வேண்டும் என்ற ஆசைதான் இருக்கும். ஆனால் குடும்பத்தின் பொருளாதார சூழல் பலருக்கு இடம் தராது. தற்போது அரசே அந்த பொறுப்பை ஏற்றுக் கொண்டு மாதந்தோறும் நிதி உதவியை அளித்து வருவதால், மாணவிகளின் உயர்கல்வி கனவு நனவாகி வருகிறது. இந்த திட்டம் அரசு பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்கு மட்டுமின்றி, அனைத்து அரசு உதவி பெறும் பள்ளி மாணவிகளுக்கும் வழங்கப்பட வேண்டும். எல்லா பகுதியிலும் அரசு பள்ளிக்கூடங்கள் இல்லை. இதனால் ஏழ்மையான குடும்ப சூழலில் இருந்தாலும் அருகில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிக்கூடத்தில் மாணவிகள் படிக்கின்றனர். அவர்களையும் இந்த திட்டம் கைதூக்கி விட வேண்டும். ஆகையால் அரசு உதவி பெறும் பள்ளிக்கூட மாணவிகளுக்கும் திட்டம் விரிவுபடுத்த வேண்டும்.
பெற்றோருக்கு சுமை குறைந்தது
கயத்தாறு அருகே உள்ள மானங்காத்தான் கிராமத்தை சேர்ந்த கல்லூரி மாணவி பிரியங்கா:- தமிழக அரசு மாணவிகள் முன்னேற்றத்துக்கு பல திட்டங்களை தந்துள்ளது. அந்த வகையில் புதுமைப் பெண் திட்டத்தின் மூலம் மாதம் தோறும் ரூ.1000 வழங்குகிறது. இந்த திட்டத்தால் நான் பயன்பெற்று உள்ளேன். இந்த உதவித்தொகையை பயன்படுத்தி கல்லூரிக்கு செல்வதற்கான செலவினத்தை சமாளித்து வருகிறேன். புத்தகம் வாங்குவது, நோட்டு புத்தகங்கள் வாங்குவது மற்றும் எனது படிப்புக்கு தேவையான பொருட்களை வாங்குவதற்கு வசதியாக உள்ளது. இதனால் எனது பெற்றோருக்கு சற்று சுமை குறைந்து உள்ளது. ஏழை, எளிய மாணவிகள் மிகவும் பயன்பெறுகிறார்கள். அதே போன்று அரசு எங்களுக்கு வேலை கிடைக்கவும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
விரிவுபடுத்த வேண்டும்
தூத்துக்குடியை சேர்ந்த கல்லூரி பேராசிரியை பொன்னுத்தாய்:- தமிழக அரசு கொண்டு வந்துள்ள புதுமைப்பெண் திட்டம் நல்ல திட்டம் தான். குடும்பத்தில் நிதிச்சுமை காரணமாக பல பெண்கள் உயர் கல்வியை தவிர்த்து வந்தனர். புதுமைப்பெண் திட்டம் அந்த பெண்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. இதனால் பல பெண்களுக்கு உயர் கல்வி படிப்பதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
அதே போன்று பொருளாதாரத்தில் பின்தங்கிய அனைத்து மாணவிகளும் இந்த திட்டத்தால் பலன் பெறும் வகையில் விரிவுபடுத்த வேண்டும். அரசு மேல்நிலைப்பள்ளிக்கூடங்கள் குறைவாகவே உள்ளது. இதனால் குறைந்த அளவிலான மாணவிகள் மட்டுமே பயன்பெறுகிறார்கள். அரசு உதவி பெறும் பள்ளிக்கூடங்களிலும் மிகவும் கஷ்டப்பட்ட மாணவிகள் பலர் படிக்கின்றனர். அவர்களுக்கும் இந்த திட்டம் சென்றடைந்தால் மாணவிகள் சமூகத்தில் பெரும் மலர்ச்சி ஏற்படும். அனைவரும் இடைநிற்றல் இல்லாமல் உயர்கல்வியை பெறுவார்கள்.
இவ்வாறு கூறினர்.
குற்றச்சாட்டு
புதுமைப் பெண் திட்டம் கடந்த செப்டம்பர் மாதம் தொடங்கப்பட்ட நிலையில், செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதத்துக்கான உதவித்தொகை மாணவிகளுக்கு இதுவரை வழங்கப்பட்டுள்ளது. இதில் சிலருக்கு அக்டோபர் மாதத்துக்கான தொகை வரவில்லை என்ற குற்றச்சாட்டும் உள்ளது.
அரசு ஒதுக்கிய நிதிகள் பல்வேறு கட்டங்களாக விடுவிக்கப்படுவதால் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் நிதி தாமதம் ஆகிறது என்றும், இந்த மாதத்துக்கான தொகை விரைவில் வழங்கப்பட உள்ளது என்றும், இனி வரக்கூடிய மாதங்களில் ஏற்கனவே தெரிவிக்கப்பட்டபடி, ஒவ்வொரு மாதமும் 7-ந்தேதியே வங்கி கணக்கில் உதவித்தொகை செலுத்தப்படுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என்றும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.