‘கல்வி நிறுவன வளாகத்தை வணிக நோக்கில் பயன்படுத்த அனுமதிக்கமாட்டோம்’ - ஐகோர்ட்டில், தமிழக அரசு தகவல்

‘கல்வி நிறுவன வளாகத்தை வணிகநோக்கில் பயன்படுத்த அனுமதிக்கமாட்டோம்’ என்று சென்னை ஐகோர்ட்டில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
‘கல்வி நிறுவன வளாகத்தை வணிக நோக்கில் பயன்படுத்த அனுமதிக்கமாட்டோம்’ - ஐகோர்ட்டில், தமிழக அரசு தகவல்
Published on

சென்னை,

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் கடந்த 2016-ல் சென்னை லயோலா கல்லூரி கூட்ட அரங்கில் நடைபெற இருந்தது. பின்னர் இந்த கூட்டம் ரத்து செய்யப்பட்டது. இந்த நிலையில் லயோலா கல்லூரி வளாகத்தை நடிகர் சங்கத்தின் பொதுக்குழுக்கூட்டம் நடத்த வாடகைக்கு விடப்பட்டதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் பத்திரிகையாளர் சுஜிதா என்பவர் வழக்கு தொடர்ந்தார்.

இதனை பொதுநல வழக்காக தாமாக முன்வந்து நீதிபதி என்.கிருபாகரன் விசாரிக்க பரிந்துரைத்தார். அதன்படி சொத்து வரி, மின் கட்டணம் என அரசுக்கு செலுத்த வேண்டிய கட்டணம் மற்றும் வரியில் பல்வேறு சலுகைகளை பெறும் கல்லூரிகள், பள்ளிகள் உள்ளிட்ட தனியார் கல்வி நிறுவனங்கள், தங்களது வளாகங்களை வணிகநோக்கில் கல்வி சாராத பிற பணிகளுக்கு பயன்படுத்தக்கூடாது என்று ஐகோர்ட்டு ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், ஆர்.ஹேமலதா ஆகியோர் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது லயோலா கல்லூரி தரப்பில், தங்களது கல்லூரி வளாகத்தை வணிக நோக்கில் பயன்படுத்தவில்லை என்றும், இதுதொடர்பாக விரிவான பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் வேண்டும் எனவும் வாதிடப்பட்டது.

உயர்கல்வித்துறை சார்பில், தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரி நிறுவனங்கள் தங்களது வளாகங்களை வணிக நோக்கில் பயன்படுத்தக்கூடாது என ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டு சுற்றறிக்கை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதேபோல தனியார் கல்வி நிறுவனங்களும் தங்களது வளாகங்களை வணிக நோக்கில் பயன்படுத்தக் கூடாது என்று விரைவில் சுற்றறிக்கை அனுப்பப்படும். இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கல்வி நிறுவன வளாகத்தை வணிகநோக்கில் பயன்படுத்த அனுமதிக்கமாட்டோம் என தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து வழக்கை ஏப்ரல் 9-ந்தேதிக்கு தள்ளிவைத்த நீதிபதிகள், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் மற்றும் லயோலா கல்லூரி நிர்வாகம் சார்பில் பதில் அளிக்க உத்தரவிட்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com