பாழடைந்த கிணற்றில் தவறி விழுந்த நாய் மூன்றாண்டுகளுக்கு பின் உயிருடன் மீட்பு

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே, பாழடைந்த கிணற்றில் தவறி விழுந்த நாய் மூன்றாண்டுகளுக்கு பின் உயிருடன் மீட்கப்பட்ட சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
பாழடைந்த கிணற்றில் தவறி விழுந்த நாய் மூன்றாண்டுகளுக்கு பின் உயிருடன் மீட்பு
Published on

பல்லடம்

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த காமநாயக்கன் பாளையம் காவலர் குடியிருப்பு பகுதியில் சுமார் 60 அடி ஆழமுள்ள பாழடைந்த பயன்பாடற்ற கிணறு உள்ளது. அந்த பகுதியைச் சேர்ந்த கட்டிட தொழிலாளி ஒருவர் செல்லப்பிராணியாக வளர்த்து வந்த நாட்டு நாய், அந்த கிணற்றுக்கு அருகே விளையாடிக் கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக உள்ளே தவறி விழுந்துள்ளது.

பொதுமக்கள் நாயை மீட்க எடுத்த முயற்சியும் தோல்வியடைந்த நிலையில், நாயை வளர்த்தவரும் அங்கிருந்து வீட்டை காலி செய்து விட்டு சென்றுவிட்டார். நாய் குரைக்கும் சத்தம் கேட்டால் மட்டும், கிணற்றுக்குள் உணவுப்பொருட்களை போட்டு வந்த அப்பகுதி மக்கள், அதற்கு பின்னர் நாயை மீட்க முயற்சியும் எடுக்கவில்லை. எப்போதாவது கிடைக்கும் உணவு பொருட்களை சாப்பிட்டு நாயும் சமாளித்து வந்துள்ளது.

இது குறித்து அந்த பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் மூலம் விலங்குகள் நல அமைப்புக்கு தகவல் கிடைத்த நிலையில், அவர்கள் பல்லடம் தீயணைப்பு துறையின் உதவியை நாடினர். உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்புத்துறையினர், கிணற்றுக்குள் இறங்கி கயிறு கட்டி நாயை பத்திரமாக மீட்டனர்.

கிணற்றில் இருந்த மீட்கப்பட்ட நாய்க்கு, வெளியே வந்ததும் பிஸ்கட் வழங்கப்பட்டது. உயிருடன் மீண்டு வந்த நாயை தழுவி, பொதுமக்கள் பலர் கொஞ்சி மகிழ்ந்தனர். நாயை மீட்ட தீயணைப்புத்துறையினருக்கும் பாராட்டு தெரிவித்தனர்.

3 ஆண்டுகளில் அந்த பகுதியிலுள்ள ஒரு நபராவது தீயணைப்புத்துறைக்கு தகவல் அளித்திருந்தால் நாயை முன்கூட்டியே மீட்டிருக்கலாம் எனக்கூறும் விலங்குகள் நல அமைப்பினர், செல்லப்பிராணிகளை ஒரு போதும் கைவிடக்கூடாது என வலியுறுத்துகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com