நரிக்குறவ பெண்களை தரையில் அமர வைத்து அன்னதானம்: கோவில் அலுவலர், சமையலர் சஸ்பெண்ட்...!

கோவிலில் நரிக்குறவ பெண்களை தரையில் அமர வைத்து அன்னதானம் வழங்கிய சம்பவத்தில் அதிகாரிகளை பணியிடை நீக்கம் செய்து அறநிலையத்துறை உத்தரவிட்டுள்ளது.
Published on

சென்னை,

செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் பஸ் நிலையம் அருகே உள்ளது தலசயன பெருமாள் கோவில். 108 திவ்விய தேசங்களில் 63-வது திவ்வியதேசம் எனப் போற்றப்படும் இந்த கோவில் இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இயங்கிவருகிறது. கடந்த 2021-ம் ஆண்டு அன்னதானம் சாப்பிட வந்த நரிக்குறவ இன மக்களைச் சாப்பிட விடாமல் கோவில் நிர்வாகத்தினர் வெளியேற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அந்த கோவிலில் ஆய்வு மேற்கொண்டார். மேலும் அன்னதான பாகுபாடு குறித்து வீடியோ வெளியிட்டுப் பரபரப்பைக் கிளப்பிய நரிக்குறவ பெண்ணுடன் அமைச்சர் சமமாக உட்கார்ந்து அன்னதானம் சாப்பிட்டார். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினும் நேரடியாகச் சென்று அந்த நரிக்குறவ பெண்களுக்கு ஆறுதல் கூறினார்.

இந்த நிலையில் மீண்டும் நரிக்குறவ பெண்களைத் தரையில் உட்கார வைத்து அன்னதானம் வழங்கப்படுவதாகப் புகார் எழுந்தது. இதையடுத்து திருப்போரூர் சட்ட மன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.பாலாஜி கடந்த 24-ம் தேதி கோவிலில் முறையாக அன்னதானம் நடைபெறுகிறதா என ஆய்வு செய்தார். அப்போது 9 நரிக்குறவ பெண்களைத் தரையில் அமர வைத்து உணவு பரிமாறப்படுவதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவர், கோவில் மேலாளர் சந்தானம் என்பவரை அழைத்து விசாரணை நடத்தினார். மேலும் எவ்வித பாகுபாடு இல்லாமல் அனைவருக்கும் சமமான முறையில் அன்னதானம் வழங்கப்பட வேண்டும் எனவும் எச்சரித்துச் சென்றார். இது தொடர்பாக இந்து அறநிலையத்துறை ஆணையர் சேகர்பாவுக்கு புகார் தெரிவிக்கப்பட்டது.

இந்த புகாரின் அடிப்படையில் இந்து அறநிலையத்துறை ஆணையர் அந்த கோவிலில் விசாரணை நடத்தினார். செயல் அலுவலர் சிவசண்முக பொன்னி, சமையலர் குமாரி ஆகியோர் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com