“உங்கள் கட்சித் தலைவரை முதல்-அமைச்சருடன் ஒப்பிட வேண்டாம்..” - தவெக தரப்பிடம் நீதிபதி காட்டம்

கோப்புப்படம்
கூட்டம் அளவை கடந்தது தெரிந்தும் நிர்வாகிகள் ஏன் பிரசாரத்தை நிறுத்தவில்லை?” என்று நீதிபதி கேள்வி எழுப்பினார்.
கரூர்,
கரூர், வேலுச்சாமி புரத்தில் கடந்த 27 தேதி தவெக தலைவர் விஜய் மக்கள் சந்திப்பு பரப்புரைக்கு வருகை தந்தார். அப்போது கூட்ட நெரிசலில் சிக்கி 100க்கும் மேற்பட்டோர் மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்தனர். அவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இதில் பலர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் தற்போது வரை 41 நபர்கள் உயிரிழந்துள்ளனர். சம்பவத்தில் 18 பெண்கள், 13 ஆண்கள், 5 ஆண் குழந்தைகள், ஐந்து பெண் குழந்தைகள் என மொத்தம் 41 நபர்கள் உயிரிழந்துள்ளனர். 110 நபர்கள் சிகிச்சை பெற்று வந்த நிலையில் 51 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் மேலும் 60 நபர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் இது தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. கைது செய்யப்பட்ட கரூர் தவெக மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன் மற்றும் மத்திய மாநகரச் செயலாளர் பவுன்ராஜ் ஆகியோர் மாவட்டகுற்றவியல் நீதிமன்ற நீதிபதி பரத் குமார் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டு, 15 நாள் காவலில் வைக்கப்பட்டனர்
இதனிடையே தமிழக வெற்றிக்கழகம் சார்பாக கோர்ட்டில் வைக்கப்பட்ட வாதத்தில், “அரசியல் காரணங்களுக்காக எங்களுக்கு எதிராக குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது. அரசியல் காரணங்களுக்காக பழிவாங்குகிறார்கள். நாங்கள் முறையாக விதிகளை பின்பற்றினோம். கூட்டத்தில் சட்டவிரோதிகள் நுழைந்துவிட்டனர். ஆம்புலன்ஸ் வர வேண்டிய அவசியம் இல்லை. கட்சிக்காரர்களை நாங்கள் தடுக்கலாம். மக்களை தடுக்க வேண்டியது போலீஸ்தான்
ஒரு நபர் ஆணைய அறிக்கை வரும் வரை யாரையும் கைது செய்யக்கூடாது. விஜய் பிரச்சாரத்திற்கு வந்தது தானாக வந்த கூட்டம், வண்டி வைத்து அழைத்து வரவில்லை. 10 ஆயிரம் பேர் வருவார்கள் என போலீஸிடம் கூறினோம், ஏனெனில் சம்பள நாள் என்பதால் குறைவாக வருவார்கள் என்று கணித்தோம். உழவர் சந்தை பகுதியில் பொறியாளர்களை அழைத்து ஆய்வு செய்தோம். 23-ம் தேதி லைட் ஹவுஸ் கார்னர் பகுதியில் அனுமதி தருவதாக போலீஸ் கூறியது. கூட்டம் அளவை கடந்ததும், பேருந்தை முன்பாக நிறுத்தி பேசச் சொல்லி கூறினோம், ஆனால் ஆதவ் அர்ஜுனா மறுத்தார். ” என்று வாதிட்டனர்.
அப்போது, நீதிபதி, “விஜய் கூட்டத்திற்கு 10,000 பேர் வருவார்கள் என எப்படி கூறினீர்கள்? சம்பள நாள், வார விடுமுறை, காலாண்டு விடுமுறை நாள் என்பதால் குறைவாக வருவார்கள் என்று எப்படி கணித்தீர்கள்? உங்கள் கட்சித் தலைவரை முதல்-அமைச்சர் அல்லது மற்ற தலைவர்களுடன் ஒப்பிட வேண்டாம். அவர் டாப் ஸ்டார், பெண்கள், குழந்தைகள் அதிகம் வருவார்கள். நீங்கள் கோரிய 3 இடமுமே பொருத்தமற்றது. அதிக கூட்டம் வரும் என்று விஜய்க்கு தெரியுமா? அவரிடம் சொல்லப்பட்டதா?
கூட்டம் அளவை கடந்தது தெரிந்தும் நிர்வாகிகள் ஏன் பிரசாரத்தை நிறுத்தவில்லை?” என்று கேள்வி எழுப்பினார்.
போலீஸ் தரப்பு வைத்த வாதத்தில், “விஜய் சொன்ன நேரத்திற்கு வராததால் நெரிசல் ஏற்பட்டது. 3 மணிக்கே வந்திருந்தால் தவிர்க்கப்பட்டிருக்கும். போலீஸ் கூறியதை மீறி ராங் ரூட்டில் சென்றனர். அனுமதி பெறும்போது வேலுச்சாமிபுரம் திருப்தியாக உள்ளது என புஸ்ஸி ஆனந்த் கூறினார், அப்போதே நிராகரிக்க வேண்டியது தானே?” என்று தெரிவிக்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து “எங்களை நம்பி வந்தவர்கள் உயிரிழந்து விட்டார்கள், அதனால்தான் விஜய் வெளியே வரவில்லை,” என்று தவெக தரப்பு உணர்ச்சிபூர்வமாக வாதிட்டது.
இவ்வாறு தொடர்ந்து பரபரப்பான வாதங்கள் முன்வைக்கப்பட்டன.






