"போக்சோ குற்றத்தில் ஈடுபடாதீர்கள்.." - மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த தவெகவுக்கு கோர்ட்டு அறிவுரை

ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கோரி த.வெ.க. தொடர்ந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க ஐகோர்ட்டு மறுப்பு தெரிவித்துள்ளது.
"போக்சோ குற்றத்தில் ஈடுபடாதீர்கள்.." - மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த தவெகவுக்கு கோர்ட்டு அறிவுரை
Published on

சென்னை,

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட மடப்புரம் கோவில் காவலர் அஜித்குமார் போலீசார் தாக்கியதில் மரணம் அடைந்தார். தமிழகத்தையே உலுக்கிய இச்சம்பவம் பெரும்பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவத்துக்கு எதிர்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

இந்த கொடூர சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து, தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் அறிக்கை வெளியிட்டு இருந்தார். தொடர்ந்து விஜய் அறிவுறுத்தலின்பேரில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை த.வெ.க. பொதுச் செயலாளர் என்.ஆனந்த் தொடர்பு கொண்டு ஆறுதல் தெரிவித்தார்.

தொடர்ந்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மடப்புரம் கோவில் காவலர் அஜீத்குமார் மரணத்திற்கு நீதி கேட்டும், உயர் நீதிமன்றத்தின் நேரடிக் கண்காணிப்பின்கீழ் சிறப்புப் புலனாய்வுக் குழு அமைத்து நீதி விசாரணை நடத்த வேண்டும் என்பதை வலியுறுத்தியும், கடந்த 4 ஆண்டுகளில் 24 பேர் காவல் நிலையத்தில் மரணம் அடைந்தது குறித்து ஐகோர்ட்டே அதிருப்தி தெரிவித்துள்ள நிலையில், இது குறித்துத் தமிழ்நாடு அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வலியுறுத்தியும், கழகத் தலைவர் விஜய் உத்தரவின் பேரில், தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் சென்னை, எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது என கூறியிருந்தார்.

போராட்டத்திற்கு அனுமதி கேட்டு சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் த.வெ.க. சார்பில் மனு முறைப்படி கொடுக்கப்பட்டது. மனுவை பரிசீலித்த போலீசார் எழும்பூரில் நடைபெற இருந்த போராட்டத்திற்கு அனுமதி மறுத்து வேறு தேதியில் போராட்டம் நடத்த வலியுறுத்தினர். இதைத் தொடர்ந்து, "கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கோரப்பட்ட இடம் அன்றைய தேதியில் வேறு காரணத்திற்குப் பயன்படுத்தப்பட இருப்பதாகக் கூறி காவல் துறையால் அளிக்கப்பட்ட மாற்று இடத்தில் (சிவானந்தா சாலையில்) வருகிற 6.7.2025, ஞாயிறு அன்று காலை 10 மணிக்குக் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது என்பதை நம் கழகத் தலைவரின் ஒப்புதலோடு தெரிவித்துக்கொள்கிறேன்" என்று த.வெ.க. பொதுச் செயலாளர் என்.ஆனந்த் தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்திருந்தார்.

இந்த சூழலில் ஆர்ப்பாட்டம் நடத்த காவல்துறை 2 முறை அனுமதி மறுத்த நிலையில் சென்னை ஐகோர்ட்டில் தவெக சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில் சிவகங்கை இளைஞர் அஜித்குமார் கொலை தொடர்பாக ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கோரி த.வெ.க. தொடர்ந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க சென்னை ஐகோர்ட்டு மறுப்பு தெரிவித்துள்ளது. மனு எண்ணிடப்பட்டு வந்தால் திங்கள் கிழமை விசாரிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் "அவசர வழக்காக பிற்பகலே விசாரிக்க என்ன அவசரம்?" என கேள்வி எழுப்பிய நீதிபதி வேல்முருகன், ஆர்ப்பாட்டத்தை தள்ளிவைக்கும்படி அறிவுறுத்தினார்.

இதனையடுத்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த த.வெ.க.வுக்கு நீதிபதி அறிவுரை வழங்கினார். இதன்படி , "குற்றம் செய்யாதீர்கள், போக்சோ குற்றத்தில் ஈடுபடாதீர்கள் என பொதுமக்களிடம் விழிப்புணர்வு செய்யுங்கள்" என்று நீதிபதி வேல்முருகன் கூறினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com