நெல்லையில் இன்று பிரசாரம்: விஜய்யின் வாகனத்தை பின்தொடரக் கூடாது - என்.ஆனந்த் அறிவுறுத்தல்

தவெக தலைவர் விஜய் நெல்லையில் இன்று பிரசாரம் மேற்கொள்கிறார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

சென்னை,

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் நெல்லையில் இன்று பிரசாரம் மேற்கொள்கிறார். நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களைச் சேர்ந்த 22 வேட்பாளர்களை ஆதரித்து அவர் பிரசாரம் செய்கிறார்.

இந்த நிலையில் விஜய்யின் பிரசார வாகனத்தை யாரும் பின்தொடரக் கூடாது என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் என்.ஆனந்த் அறிவுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

மக்கள் விரும்பும் முதல்வர் வேட்பாளர், வெற்றித் தலைவர் விஜய், இன்று (08.04.2026, புதன்கிழமை) திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட திருநெல்வேலி - தூத்துக்குடி புறவழிச்சாலையில் உள்ள காப்பர் லீப் ஹோட்டல் அருகே ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இடத்தில் பிற்பகல் 1 மணி முதல் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள தேர்தல் ஆணையத்திடம் அனுமதி பெறப்பட்டுள்ளது.

அதன்பின்னர், தாழையூத்து, தச்சநல்லூர், வண்ணார்பேட்டை, மார்க்கெட் மற்றும் கே.டி.சி. நகர் வழியாக, தூத்துக்குடி செல்கிறார். மாலை 3 மணி முதல் கழகத் தலைவர், தூத்துக்குடி நகர உட்கோட்டம், மைல் பகுதியில் இருந்து VVD சிக்னல் வரை சாலை நிகழ்ச்சி ( Road Show) நடத்த தேர்தல் ஆணையத்திடம் அனுமதி பெறப்பட்டுள்ளது.

இந்தப் பிரசார நிகழ்ச்சிக்காக, தேவையான குடிநீர், மருத்துவ வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இந்தப் பிரசார நிகழ்வுகளில் கலந்துகொள்ள வரும் கழகத் தலைவரின் பிரசார வாகனத்தை இருசக்கர வாகனங்கள் உள்ளிட்ட எவ்வித வாகனங்களிலும் யாரும், அறவே பின்தொடரக் கூடாது. தேர்தல் ஆணைய விதிகளை பின்பற்றுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

மேலும், இந்தத் தேர்தல் பிரசார நிகழ்வுகளில், கர்ப்பிணிப் பெண்கள், சிறுவர் - சிறுமியர், பள்ளி மாணவ - மாணவியர், மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள், உடல்நலம் குன்றியவர்கள் மற்றும் பொதுமக்கள் நேரில் வந்து கலந்துகொள்வதைத் தவிர்த்து, சமூக வலைத்தளம் மற்றும் தொலைக்காட்சி நேரலைகளில் கண்டு, அனுமதிக்கப்பட்டவர்கள் மட்டுமே பங்கேற்க முழு ஒத்துழைப்பு தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com