பேச்சுவார்த்தை எனும் சதிவலையில் சிக்காதீர்: முதல்-அமைச்சர் விஜய்க்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

கூட்டணி மயக்கத்தில் தமிழ்நாட்டின் காவிரி உரிமை பணயமாகிடக்கூடாது என்பதே டெல்டா விவசாயிகளின் ஒருமித்த குரல் என மு.க.ஸ்டாலின் கூறினார்.
மு.க.ஸ்டாலின்
Published on

சென்னை,

காவிரி நீருக்காக கர்நாடக அரசுடன் பேச்சுவார்த்தை எனும் சதிவலையில் முதல்-அமைச்சர் சிக்க வேண்டாம் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

காவிரி நீர்ப் பங்கீட்டில் தமிழ்நாட்டின் உரிமையை நிலைநாட்ட நாம் எடுத்த முயற்சிகளின் வரலாறு மிக நீண்டது. 1960-களில் தொடங்கி 1990 வரை பல முறை பேச்சுவார்த்தை நடத்தியும் எந்தத் தீர்வும் கிடைக்காததால்தான் அது கைவிடப்பட்டு, உச்சநீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் கலைஞர் முதலமைச்சராக இருந்தபோது, சமூகநீதிக் காவலர் வி.பி.சிங் அவர்கள் ஆட்சிக்காலத்தில் காவிரி நடுவர் மன்றம் அமைக்கப்பட்டது. அதன்பிறகும் தமிழ்நாட்டுக்கான தண்ணீரை வழங்குவதில் அநீதி இழைத்து வந்தது கர்நாடக மாநில அரசு.

கடந்த காலங்களில் காவிரி நீர் விவகாரத்தில் கர்நாடக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்ற யோசனை சொல்லப்பட்டபோதெல்லாம், அதனை உறுதியாகத் திராவிட முன்னேற்றக் கழக அரசு நிராகரித்தது. ஏனென்றால், பேசுவது ஒன்றும் செய்வது ஒன்றுமாகவே கர்நாடக மாநில அரசு செயல்படும். உரிமையை நிலைநாட்டுவதாக இல்லாமல் பிரச்சினையை இழுப்பதாகவே அப்பேச்சுவார்த்தைகள் அமையும்.

அதிலும் குறிப்பாக, காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டுவது தமிழ்நாட்டின் உரிமையை முற்றிலுமாக நிராகரிப்பதாகும். எனவே, இதுகுறித்து கர்நாடக அரசுடன் எத்தகைய பேச்சுவார்த்தையும் நடத்துவதால் பயனில்லை என்பதே நமது நிலைப்பாடாகும்.

மேகதாது குறித்து பேசுவதற்காக, கர்நாடக முதல்-மந்திரி. எடியூரப்பா அவர்கள் அழைப்பு விடுத்தபோது, முதல்-அமைச்சராக இருந்த நான், “அந்தப் பேச்சுக்கே இடமில்லை” என மறுத்தேன். அப்போது நீர்வளத்துறை அமைச்சராக இருந்த துரைமுருகன் அவர்களும், “பேச்சுவார்த்தைக்கே இடமில்லை” எனத் திட்டவட்டமாக அறிவித்தார். முற்றிலும் தமிழ்நாட்டுக்கும் மக்களுக்கும் உழவர் பெருமக்களுக்கும் விரோதமானது அந்தத் திட்டம். அதில் பேசுவதற்கு என்ன இருக்கிறது? என்பதே ஒட்டுமொத்தத் தமிழ்நாட்டு மக்களின் எண்ணம்.

இந்நிலையில், கர்நாடகம் சென்று அம்மாநில முதல்-மந்திரியுடன் முதல்-அமைச்சர் விஜய் பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளார் என வேளாண்துறை அமைச்சரே தெரிவித்திருப்பது விவசாயிகள் மத்தியில் பெருங்கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. இது கர்நாடக அரசிடம், தமிழ்நாடு பணிந்து போகும் நிலையாகும்.

மேகதாது அணையைக் கட்டியே தீருவோம் என்றும், அதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கிவிட்டது என்றும், யார் எதிர்த்தாலும் கட்டியே தீருவோம் என்றும் கர்நாடக மாநில அரசு வெளிப்படையாக, தொடர்ச்சியாகச் சொல்லும் போது, அவர்களிடம் பேசி என்ன ஆகப் போகிறது? அவர்களது பிடிவாதக் குணத்தை நேரில் கேட்டுத் தெரிந்து கொள்ளப் போகிறோமா?

காவிரி நீர் திறக்க உச்சநீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் ஏற்கனவே ஒரு “ஸ்கீம்” உருவாக்கப்பட்டு, எந்தெந்த மாதம் எவ்வளவு தண்ணீர் திறக்க வேண்டும் என்பதும் உச்சநீதிமன்றத்தால் இறுதி செய்து வெளியிடப்பட்டு விட்டது. அதைச் செயல்படுத்தக் காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி ஒழுங்காற்றுக் குழு ஆகியவை அமைக்கப்பட்டு விட்டன. இந்த நிலையில், பேச்சுவார்த்தைக்குச் செல்வது என்பது தமிழ்நாடு அரசின் 30 ஆண்டுகாலச் சட்டப் போராட்டத்தைச் சிதைப்பதாக அமைந்துவிடும். பேச்சுவார்த்தைக்குத் முதல்-அமைச்சர் விஜய் கர்நாடகம் செல்வது, தமிழ்நாட்டின் நிலையைக் குறைப்பதாகவும் அமைந்துவிடும்.

ஏற்கெனவே உள்ள சட்டப்பூர்வ உரிமையைச் சிதைக்க “பேச்சுவார்த்தை” எனக் கர்நாடகம் தற்போது விரித்திருக்கும் சதிவலையில் வலியச் சென்று தமிழ்நாடு முதல்-அமைச்சர் சிக்குவது ஏன்? தமிழ்நாட்டின் உரிமையைத் தாரைவார்க்கும் விதமாக முதலமைச்சர் செய்யும் இந்தச் செயலைப் பார்த்துக் காவிரி டெல்டா விவசாயிகள் கொதித்துப் போயிருக்கிறார்கள்.

கர்நாடக மாநிலத்தை ஆள்வது காங்கிரஸ் கட்சி அரசாகும். தமிழ்நாடு அரசிலும் காங்கிரஸ் கட்சி பங்கு வகிக்கிறது. எனவே கண்துடைப்புக்காக இதுபோன்ற பேச்சுவார்த்தை நாடகம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதா என்ற கேள்வியும் எழுகிறது. 'நாங்கள் நேரிலேயே போய்ப் பேச்சுவார்த்தை நடத்தினோமே' என்று கணக்குக் காட்டுவதற்கு வேண்டுமானால் இது பயன்படலாமே தவிர, வேறு எந்தப் பயனும் ஏற்படப் போவது இல்லை.

காவிரி நீர் உரிமைப் பங்கீட்டுப் போராட்டம் நீண்ட நெடியது. தமிழ்நாட்டின் காவிரி உரிமை சட்டப்பூர்வமாக நிலைநாட்டப்பட்ட ஒன்று. காவிரி நீர் உரிமையின் ஆழ அகலங்களைப் புரிந்துகொண்டு தமிழ்நாடு முதல்-அமைச்சர் தனது செயல்பாடுகளை மேற்கொள்ள வேண்டும்.

தமிழ்நாட்டிற்குக் காவிரி நீர் தரக் கர்நாடகம் மறுத்தால், அது நீதிமன்ற அவமதிப்பு; சட்ட மீறல்! மேகதாது அணை கட்ட முயற்சிப்பது உச்சநீதிமன்ற இறுதித் தீர்ப்பை மீறுவது. காவிரி போன்ற தமிழ்நாட்டின் தலையாய பிரச்சினைகளில் அனைத்துக் கட்சிகளின் ஆலோசனையையும் - விவசாயச் சங்கங்களின் கருத்துகளையும் பெற்ற பின்பே செயல்பட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். காவிரி உரிமை தொடர்பாகப் பேச்சுவார்த்தைக்குக் கர்நாடகம் செல்லும் தவறான முயற்சியை முதல்-அமைச்சர்கைவிட வேண்டும் என்று காவிரி டெல்டா விவசாயிகள் சார்பாகவும் - தமிழ்நாட்டு மக்கள் அனைவரின் சார்பாகவும் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com