

சென்னை,
திமுக தலைவரும், முன்னாள் முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-
சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் குறித்து, 234 தொகுதிகளுக்கும் சென்று கள ஆய்வு செய்ய 38 பேர் கொண்ட குழுவினரை நியமித்திருந்தேன். இன்று அவர்களுடனான சந்திப்பில் இந்த ஆய்வை எப்படி மேற்கொள்வது என, சில முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கியிருக்கிறேன்.
• நீங்கள் ஒவ்வொருவரும் தலைமைக் கழகத்தின் பிரதிநிதிகளாக, எனது சார்பில் அனுப்பி வைக்கப்படுபவர்கள். எனது காதுகளாகச் செல்பவர்கள்.
• தனிப்பட்ட விருப்பு வெறுப்பின்றி, கட்சிக்காரர்கள் சொல்லும் உண்மையை அப்படியே வந்து என்னிடம் சொல்வது மட்டுமே உங்கள் வேலை.
• நீங்கள் யாரையும் காப்பாற்றவும் முயற்சி செய்ய வேண்டாம். யாரையும் பழிவாங்கவும் எண்ணக் கூடாது.
• இரண்டு பேர் கொண்ட குழுவாகத்தான் யாரையும் சந்திக்க வேண்டும். ஒருவர் மட்டும் தனியாகச் சந்திக்க கூடாது.
• கழகத்தினரை மனதுவிட்டுப் பேச அனுமதியுங்கள். அவர்களின் குறைகளை, தேர்தல் முடிவுகளுக்கான காரணங்களை அவர்கள் கொட்டித் தீர்க்கட்டும்.
• தலைவரான என் மேலேயே குறை சொன்னாலும் பரவாயில்லை. அதைக் குறித்து வைத்து உங்களது அறிக்கையில் வழங்குங்கள்.
• நிர்வாகிகளின் உணர்வு என்ன? அவர்கள் உண்மையில் என்ன நினைக்கிறார்கள்? அது மட்டும்தான் எனக்குத் தேவை.
• டாக்டரிடம் பொய் சொல்லக் கூடாது என்பார்கள். இப்போது நானும் அந்த இடத்தில்தான் இருக்கிறேன். என்னிடம் எதையும் மறைக்காதீர்கள்.
• நோய் என்னவென்று தெளிவாகத் தெரிந்தால்தான் அதற்கு மருந்து கொடுக்க முடியும்.
• கழகத்தினர் உங்களிடம் சொல்லும் தகவல்களை வேறு யாரிடமும் பகிர்ந்துகொள்ளக் கூடாது. குறிப்பாக, சம்பந்தப்பட்ட நபர்களிடம் சொல்லக் கூடாது.
• அப்படி செய்தால் இந்த ஆய்வின் நோக்கமே வீணாகிவிடும்.
• பிரச்சினைகளைச் சரிசெய்து, நம்மை மாற்றிக் கொண்டால்தான் அடுத்த 100 ஆண்டுகளுக்கு உயிர்ப்போடு இயங்க முடியும்.
• நீங்கள் தரும் அறிக்கையின் அடிப்படையில்தான் கழகத்தில் மாற்றங்கள், சீர்திருத்தங்களைச் செய்யப் போகிறேன்.
• அதனால் scan report போல துல்லியமாக இது இருக்க வேண்டும்.
• ஜூன் 5-க்குள் இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு, இதன் மீதான நடவடிக்கைகளை ஜூன் மாத இறுதிக்குள் முடித்திட வேண்டும்.
• உடன்பிறப்புகளின் உண்மையான உணர்வினை அறிந்து வந்து சொல்லுங்கள்! இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.