அவனை சும்மா விடாதீர்கள்... வீடியோ வெளியிட்டு பெண் தற்கொலை - கணவர் கைது

உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு வீடியோ அனுப்பிவிட்டு பெண் தற்கொலை செய்து கொண்டார்.
அவனை சும்மா விடாதீர்கள்... வீடியோ வெளியிட்டு பெண் தற்கொலை - கணவர் கைது
Published on

சென்னை,

சென்னை அடுத்த பூந்தமல்லி அருகே கரையான்சாவடியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் செல்வின். இவரது மனைவி ஷாலினி (33 வயது). என்ஜினீயரான இவர் சாப்ட்வேர் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இருவரும் கடந்த 8 வருடங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 6 வயதில் ஒரு மகள் உள்ளார். கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் ஷாலினி மனவேதனையில் இருந்து வந்தார்.

இந்த நிலையில் வீட்டில் தனியாக இருந்தபோது ஷாலினி திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த பூந்தமல்லி போலீசார் ஷாலினியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையே ஷாலினி தற்கொலை செய்வதற்கு முன்பு வீடியோ ஒன்றை பதிவு செய்து, உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு அனுப்பி உள்ளார். அந்த வீடியோவில் கதறி அழுதபடி ஷாலினி கூறியிருப்பதாவது:-

என்னால் தாங்க முடியவில்லை. பிரிந்தும் வாழ விடமாட்டீர்கள். என்னால் யாருக்கும் எந்த பாரமும் வேண்டாம். இவனை யாரும் சும்மா விடாதீர்கள். நான் பொறுத்து பார்த்தும் முடியவில்லை. செல்கிறேன். நான் இந்த வீடியோவை அனுப்புகிறேன். இதனை போலீசில் கொடுங்கள். ஆவடியில் உள்ள வீடு இரண்டு பேரின் பெயரில் உள்ளது. அதனை நீங்கள் வாங்கிக் கொள்ளுங்கள். நானே எதுவும் செய்து கொள்ள வேண்டும் என்று கொடுமைப்படுத்துகிறான். பிளீஸ் அவனை சும்மா விடாதீர்கள். நான் போகிறேன். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து ஷாலினியின் கணவர் செல்வினை கைது செய்தனர். விசாரணையில் நேற்று காலை குழந்தையை ஷாலினி அடித்ததாக கூறப்படுகிறது. இதனை கணவர் கண்டித்து ஷாலினியை தாக்கிவிட்டு உடற்பயிற்சி கூடத்திற்கு சென்றதாக தெரிகிறது. அதன் பின்னர் ஷாலினி தற்கொலை செய்து கொண்டுள்ளார். ஷாலினியின் தற்கொலை முடிவுக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com