உண்மை தெரியாமல் பேச வேண்டாம்: சுர்ஜித்தின் சகோதரி வீடியோ வெளியிட்டு விளக்கம்

எங்களுடைய காதல் கடந்த மே மாதமே குடும்பத்தினருக்கு தெரியும் என்றும் சுர்ஜித்தின் சகோதரி விளக்கம் அளித்துள்ளார்.
நெல்லை, நெல்லை:
நெல்லையில் ஐ.டி. ஊழியர் கவின் செல்வகணேஷ் கொல்லப்பட்ட வழக்கில், சுர்ஜித் கைது செய்யப்பட்டார். அவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. சுர்ஜித்தின் தந்தை, காவல் உதவி ஆய்வாளர் சரவணனும் நேற்று இரவு கைது செய்யப்பட்டார். நெல்லை மாநகர காவல்துறையினர் அவரைக் கைது செய்தனர். கவின் செல்வகணேஷ் கொலை வழக்கை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றி, தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. சுர்ஜித்தின் தாயாரையும் கைது செய்ய வேண்டும் என்று கவின் குடும்பத்தினர் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், கவினின் தோழி ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: "கவினின் கொலையில் என் பெற்றோருக்கு தண்டனை கொடுப்பது தவறு. என் அப்பா, அம்மாவுக்கு எதுவும் தெரியாது. கவினுக்கும் எனக்குமான உறவு எங்களுக்கு மட்டுமே தெரியும். என் அப்பா, அம்மாவை விட்டுவிடுங்கள். உண்மை தெரியாமல் பேச வேண்டாம். என் உணர்வுகளைப் புரிந்து கொள்ளுங்கள்," என்று தெரிவித்துள்ளார்.
சுர்ஜித்தின் சகோதரி மேலும் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: "நானும் கவினும் உண்மையாகக் காதலித்தோம். கொஞ்சம் செட்டில் ஆக நேரம் தேவைப்பட்டது. மே 30 ஆம் தேதி சுர்ஜித்தும் கவினும் பேசியிருக்கிறார்கள். அந்த நேரமே அப்பாவிடம் சொல்லிவிட்டான். அப்பா என்னிடம், 'நீ லவ் பண்ணுறியா?' என்று கேட்டார். அப்போது நான் 'இல்லை' என்று சொன்னேன். ஏனென்றால், கவின் என்னிடம் டைம் கேட்டிருந்தான்.
அதனால், அப்பாவிடம் அப்போது சொல்லவில்லை. அதற்குள் இப்படி ஆகிவிட்டது. இரண்டு பேருக்கும் இடையில் என்ன நடந்தது என்று தெரியவில்லை. ஆனால், கவினுக்கு போன் செய்த சுர்ஜித், 'பொண்ணு கேக்க வாங்க' என்று சொல்லியிருக்கிறான். 'எனக்கு திருமணம் முடிந்தால்தான் என்னுடைய தொழிலைப் பார்க்க முடியும்' என்று சொல்லியிருக்கிறான். அது எனக்குத் தெரியும்.
அன்று என்ன நடந்தது என்றால், கவினின் தாத்தாவுக்கு சிகிச்சை அளிக்க கவின், அவனுடைய அம்மா, மாமா வந்திருந்தார்கள்.நான் சிகிச்சை பற்றி பேசிக்கொண்டிருக்கும்போது கவினின் அம்மா, மாமாவிடம் பேசிவிட்டு கவின் வெளியே சென்றுவிட்டான். அதன்பிறகே கவினைத் தேடினோம். போன் செய்தபோது அவன் எடுக்கவில்லை. அதன்பிறகுதான் இப்படி நடந்துவிட்டது. தேவையில்லாமல் யாரும் இஷ்டத்திற்கு வதந்தியை கிளப்ப வேண்டாம். உங்களுக்கு தோன்றுவதை எல்லாம் பேசாதீர்கள். என் அப்பா, அம்மாவுக்கு இதில் எந்த சம்மந்தமும் கிடையாது,. இதை இத்துடன் விட்டுவிடுங்கள். விட்ருங்க அவ்வளவு தான்" என்று கூறியுள்ளார்.






